589
 

படும் பொருளும் அவனல்லன். இவ் வுண்மையினைத் தெளிதற்பொருட்டு நல்லாருடன் ஆராயுங்கள். ஆராய்ந்து தெளியுங்கள். தெளிந்தபின் நுமக்குத் திருவடியாகிய நிலைத்த புக்கில்லாம் மனைபுகுந்து பேரின்பம் எய்துதலாகும். நல்லார் : நற்றமிழாகமம் கைக்கொண்டு நாளும் இடையறாதொழுகும் சித்தாந்தச் சைவர்.

(அ. சி.) ஆறு சமயம் - பைரவம், சமணம், பாஞ்சராத்திரம், பாட்டாசாரியம், உலகாயதம், சூனிய வாதம். (வேறுவிதமாகக் கூறுவாருமுளர்.)

(6)

1509. சிவமல்ல தில்லை யறையே சிவமாந்
தவமல்ல தில்லை தலைப்படு வார்க்கிங்
கவமல்ல தில்லை அறுசம யங்கள்
தவம்வல்ல நந்திதாள் சார்ந்துய்யு நீரே.1

(ப. இ.) அறைகூவி விளம்புங்கால் சிவபெருமான் அன்றி வேறு ஒரு முழுமுதல் யாண்டும் இன்று. சிவமாம் பெருவாழ்வெய்தும் சீலம் நோன்பு செறிவு அறிவென்னும் இறப்பில் தவமன்றி வேறு சிறந்த தவமும் இல்லை. திருவடிப் பேறெய்தும் செந்நெறிச் செல்வர்கட்கு மேல் ஓதியனவன்றி ஆறு சமயங்களும் தவத்திற்கு மாறாகிய அவமேயாகும். செந்நெறித் தவத்தான் வெளிப்பட்டருளும் வல்ல சிவகுருவாகிய நந்தியெங்கடவுளின் திருவடியிணையினைச் சார்ந்து நீங்கள் உய்வீர்களாக.

(அ. சி.) அவமல்லதில்லை அறு சமயங்கள் - ஆறு சமயங்களும் பாபமார்க்கங்கள்.

(7)

1510. அண்ணலை நாடிய ஆறு சமயமும்
விண்ணவ ராக மிகவும் விரும்பியேம்
உண்ணின் றழிய முயன்றில ராதலான்
மண்ணின் றொழியும் வகையறி யார்களே.2

(ப. இ.) சிவபெருமான் திருவடியிணையினை எய்துதல் வேண்டுமென்று எண்ணிமுயலும் ஆறு அகச் சமயத்தவர்களும் பிறரும் அந்நாட்டமொழிந்து தாங்களே தேவராகவேண்டுமென்று மிகவும் விரும்புகின்றனர். விரும்புதலான் பிறப்புக்கு வித்தாம் ஏமம் என்று சொல்லப்படும் உள்ளே நிற்கும் ஆசை ஒழியமுயன்றிலர். ஆதலால் மண்ணில் பிறக்கும் பிறப்பறமுயலும் செந்நெறியின் நிற்கும் வகை அறியாராயினர் விரும்பி : விரும்ப எனத் திரிக்க ஏமம் என்பது ஏம் எனக் குறைந்து நின்றது.

(அ. சி.) அண்ணலை நாடிய ஆறு சமயம் - உட் சமயங்கள் ஆறும் உள் நின்று அழிய - ஆசை ஒழிய. மண்ணின்று ஒழியும் வகை - பிறப்பு அறும் வகை.

(8)


1. நமச்சி. அப்பர். 5. 97 - 22.

" புக்கில். திருக்குறள். 340.

2. வாழ்த்துவதும். 8. 2. அறிவுறுத்தல், 16.