(ப. இ.) மேல்நிலை கீழ்நிலை என்னும் இருவகைப் பிறப்பு நிலைக்கும் காரணமாகப் பழிக்கப்படுவது நில்லா வுலகினை, நிலையென மயங்கும் நிலைமை. ஓமொழியேனும் அல்லது புருவமத்தியேனும் என்று கொள்ளப்படும் சுழியினிடமாக வெளிப்பட்டுநின்று இயக்கவல்லவன் சிவபெருமான். அவன் ஆணைவழி முன்னின்று உலக அழிவினை உணரவல்லார் நன்னெறியினை நாடவல்லாராவர். அவர்கள் தீ நெறிக்கண் செல்லார். (அ. சி.) வழியிரண்டு - மேல்கதி, கீழ்கதி. சுழி - பிரணவம். அழிவு அறிவார் - நிலையாமையை உணர்வார். நெறி - முற்கூறிய இரண்டு வழிகளை. (14) 1517. மாதவர் எல்லாம் மாதேவன் பிரான்என்பர் நாதம தாக அறியப் படுநந்தி பேதஞ்செய் யாதே பிரான்என்று கைதொழில் ஆதியும் அந்நெறி யாகிநின் றானே. (ப. இ.) இறப்பில் பெரும்தவத்தோரெல்லாம் மாதேவனாகிய சிவபெருமானே முழுமுதல்வன் என்பர் அதன் தூமாயையின்கண் விளங்கும் ஓசைமெய்யாகிய நாததத்துவ வடிவாக அறியப்படுவன் தூமாயை அவனுடைய நேராட்சி என்பர். அவன் திருப்பெயர் நந்தி அவனை வேறாகக் கருதாது அவனே உயிர்க்குயிராய் நிற்கும் முதல்வன் என்று 'சிவசிவ' என நினைந்து அம்மை அப்பரே என வாழ்த்தி ஆண்டருள் என்று கைதொழுதால் ஆதியாகிய சிவபெருமானும் அம்முறையே உடனாய் நின்றருள்வன். சி என்னும் முதலெழுத்து அப்பனையும், வ என்னும் இரண்டாமெழுத்து அம்மையையும் குறிப்பன. (அ. சி.) நாதமதாக - நாத உருவினனாக. (15) 1518. அரனெறி யப்பனை யாதிப் பிரானை உரநெறி யாகி யுளம்புகுந் தானைப் பரநெறி தேடிய பத்தர்கள் சித்தம் பரனறி யாவிடிற் பல்வகைத் தூரமே. (ப. இ.) அரனெறியாகிய சிவனெறி அப்பனை ஆதியாகிய அம்மையை உடம்பின் இடப்பக்கமாகிய ஒரு கூற்றிலே விட்டுவிலகாது ஒட்டித் திகழும் முழுமுதற்சிவனை, அறிவு நெறியாகிய ஆருயிர்களின் உள்ளம் புகுந்தவனை, நன்னெறியாகிய வீடுபேற்றுநெறியினைத் தேடிய 'பண்டை நற்றவத்தால் தோன்றிப் பரமனைப் பத்திபண்ணும் தொண்டர்'களின் உள்ளத்தை உடனிருந்தறியும் ஒருவனை அறியாவிட்டால் வீடு பேற்றுவழி தொடுதற்கும் தொடுமாறுன்னுதற்கும் கிட்டாநெடுந்தொலைவாகும். (அ. சி.) அரன்நெறி - சன்மார்க்கம். உரநெறி - அறிவு நெறி. பரநெறி - முத்திநெறி. பல்வகைத் தூரம் - நெடுந்தூரம். (16)
1. வாது. அப்பர், 5. 100 - 4 " வித்தையோ. சிவஞானசித்தியார், 1. 3 - 7 " வாராண்ட, அப்பர், 6. 98 3.
|