(ப. இ.) அமரரும் வித்தியாதரரும் சிவனை ஆய்ந்தறிவார்கள். அவர்கள் ஆய்ந்து அறிய முடியாதபடி அப்பால் நின்றதாகும் அரனெறி. சிவபெருமானின் திருவடியைத் தொழும்பேறு கிடைத்தமையால் அவ்வருள் துணையால் அவனை ஆராய்ந்துணர்ந்தேன். அம் முறைமையினால் நிலையாதனவாகிய இம்மை உம்மையாகிய மறுமைகளை வெறுத்து ஒதுக்கினேன். அதனால் செந்நெறியாகிய அம்மையென்னும் அரனெறியின் உண்மையினை உள்ளவாறு உணர்ந்தேன். அம்மை - திருவடிப்பேறு. (அ. சி.) ஆய்ந்து அறியாவணம் - சாதாரண மனிதர்கள் ஆராய்ந்து அறிய முடியாத. காய்ந்து - விருப்பு வெறுப்பு இன்றி. (15) 1547. அறியவொண் ணாதவ் வுடம்பின் பயனை அறியவொண் ணாத அறுவகை யாக்கி அறியவொண் ணாத அறுவகைக் கோசத் தறியவொண் ணாததோர் அண்டம் பதிந்ததே.1 (ப. இ.) பெறுதற்கரிய மக்கள்யாக்கையின் பயன் வீடுபேறடைதல். அதனையடையும் வழிவகைகளை எளிதாக்க அகச் சமயம் ஆறனையும் அருளினன். உண்டென்று கூட உணரமுடியாத தொன்மை ஆணவ மலத்தை அறுவகைசெய்து, உணவுடம்பு, வளியுடம்பு, மனவுடம்பு, அறிவுடம்பு, இன்பவுடம்பு ஆகிய ஐவகையுடம்புகளானும் அறியமுடியாத திருவருள் பெருவெளி ஆருயிர்மாட்டுப் பதிந்ததென்க. அறுவகை - அற்றுப்போம்வகை. ஐவகை உடம்பினையும் முறையே அன்மையகோசம் பிராணமயகோசம், மனோமயகோசம், விஞ்ஞானமயகோசம், ஆனந்த மயகோசம் என்ப. அகச்சமயம் ஆறும் வருமாறு : 1. ஆவிக்கற்கோள். 2 ஆவி வேற்றுமைக்கோள். 3. சிவனொப்புக்கோள். 4. கருவி சென்று பற்றுங்கோள். 5. சிவன் செயலின்மைக்கோள். 6. சிவத்திரிபுக்கோள் என்பன. இவற்றை முறையே பாடாணவாதம், பேதவாதம், சிவசமவாதம், சங்கிராந்தவாதம், ஈசுவரவிகாரவாதம், நிமித்த காரண பரிணாமவாதம் எனவுங் கூறுப. (அ. சி.) உடம்பின் பயன் - உடம்பினால் பெறப்படும் பயன் முத்தி. அறுவகை - ஆறுவகை உட்சமயங்களாக. அறியவொண்ணாத அறுவகை - அறிதற்கு அரிதாகிய ஆணவமலம் அறும்வகை செய்து. கோசத்து - உடம்பினுள், அண்டம் - அண்டகாரணனாகிய சிவம். (16) நான்குறுதி பெற்றார் சிவநற்றாட் பேறுறுவர் நூன்முறைஐந் தாந்தந்திரம் நோக்கு. ஐந்தாம் தந்திரம் முற்றும்.
1. பலரைப். திருவருட்பயன். 3. இருள்மலநிலை. 5. " என்று. 12. வெள்ளானைச் சருக்கம், 53. " மருவானந்தம். சிவஞானசித்தியார், 4. 2 - 18. " தோற்பாவைக்." 4. 2 - 19.
|