139. நேரிழை யாவாள் நிரதிச யானந்தப் பேருடை யாளென் பிறப்பறுத் தாண்டவள் சீருடை யாள்சிவ னாவடு தண்டுறை சீருடை யாள்பதஞ் சேர்ந்திருந் தேனே. (ப. இ.) திருவாவடுதுறைக்கண் சிறந்த அணிகலன் அணிந்து விளங்கும் திருவருளம்மை உயர்வற உயர்ந்த ஒருபேரின்பத் திருப்பெயரினள்; அடியேனுடைய பிறப்பினை அறுத்து ஆண்டவள் அவளே. சிவனுடன் விட்டு நீங்காது இடப்பாகத்து ஒட்டியுறையும் சிறப்பினையுடையவள். அத்தகைய எல்லாச் சிறப்பினையுமுடைய திருவருளம்மையின் திருவடியினைச் சேர்ந்திருந்தேன். சேர்ந்திருத்தல் - இடையறாது நினைந்திருத்தல். (5) 140. சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச் சேர்ந்திருந் தேன்சிவ னாவடு தண்டுறை சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலிற்1 சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள்2 ஓதியே. (ப. இ.) சிவமங்கைதன் பங்கனாகிய சிவபெருமானைக் கூடியிருந்தேன். சிவனுக்குச் சிறப்பாக உடைய திருவாவடுதுறைக்கண் கூடியிருந்தேன். திருவாவடுதுறைத் திருக்கோவிலின்கண் மேல்பாலுள்ள திரு அரசமரத்து நிழலில் கூடியிருந்தேன். சிவன் திருநாமம் திருவைந்தெழுத்தென்ப. அது 'நந்திநாமம் நமச்சிவாயவே' என்பதனால் உணரலாம். பண்டையோர் மந்திர எழுத்துக்களை மாத்திரை கூட்டியும் குறைத்துங் கடைக்குறைத்தும் கையாண்டு வந்தனர். அதனாலேயும் அது மறை எனவும் பெயர் பெற்றது. இவ்வுண்மை 'அவ்வுடன்' என்று தொடங்கும் சிவஞானசித்தியார் (4-1-1) திருப்பாட்டின்கண் சிவஞான முனிவர் உரைத்தருளிய உரையான் உணரலாம். அது வருமாறு: 'பிரணவமாகலின் உள்ளவாறே வெளிப்படக் கூறாது ஒவ்வெனக் கடைக் குறைத்துக் குறுக்கல் விகாரமாக்கிக் கூறினார்.' எனவே 'நமசிவய' என்பதே நமசிவாய என நீட்டல் விகாரம் பெற்றது. சிவ நாமங்கள்: நமசிவய, சிவயநம, சிவயசிவ, சிவசிவ என்பனவாம். இவை நன்னெறி நான்மைக்கும் முறையே உரிய மேன்மை மந்திரங்களாம். இவற்றின் பெருமையை வருமாறு நினைவு கொள்க. விளக்கம் முன்னுரைக்கண் காண்க. செவிலியொடு நற்றாய் சிவமணமே இன்பச், சுவையழுந்தல் நான்மை எழுத்தைந்து. (அ. சி.) சிவபோதி - சிவன் கோவிலில் உள்ள அரசு. (6) 141. அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப் புகலிடத் தெம்மெய்யைப்3 போதவிட் டானைப் பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே.
1. ஆடுவதண். 12. திருமூலர், 35. 2. நந்திநாமம். சம்பந்தர், 3. 49 - 11. 3. (பாடம்) தென்றனைப்.
|