611
 

1562. சிவமான ஞானத் தெளியவொண் சித்தி
சிவமான ஞானத் தெளியவொண் முத்தி
சிவமான ஞானஞ் சிவபரத் தேயேகச்
சிவமான ஞானஞ் சிவானந்த நல்குமே.

(ப. இ.) சிவமாக்கும் திருவடியுணர்வு சிவஞானம் எனப்படும். சிவஞானம் எனினும் திருவருள் எனினும் ஒன்றே. அத் திருவருளால் ஆருயிர்களின் அறிவு தெளிவுபெறும். அறிவு தெளியச் சிறந்த சித்திகள் கைகூடும். பற்றுறுதியாகிய வீடும் எய்தும். இவற்றால் சிவம் தானாதல் என்னும் சீரும் பொருந்தும். அத்திருவருளே தவலில் சிவ இன்பமாகும்.

(அ. சி.) சிவபரம் - சாயுச்சியம்.

(15)

1563. அறிந்துணர்ந் தேனிவ் வகலிட முற்றுஞ்
செறிந்துணர்ந் தோதித் திருவருள் பெற்றேன்
மறந்தொழிந் தேன்மதி மாண்டவர் வாழ்க்கை
பிறிந்தொழிந் தேனிப் பிறவியை நானே.

(ப. இ.) திருவருட்டுணையால் உலகியல் உண்மை முற்றும் அறிந்துணர்ந்தேன். சிவன் திருவடிக்குப் பேரன்பு வைத்துத் திருமுறையும் சித்தாந்த நூல்களும் ஓதியுணர்ந்து திருவருள் பெற்றேன். சிவனடி நினைக்கும் சிறந்த அறிவில்லாரின் பெருவாழ்வையும் மறந்தொழிந்தேன். அதனால் சிறப்பிலார் தம் திறத்துச் சேர்வை நீங்கிற்று. நீங்கவே பிறவியினின்று விடுபட்டேன்.

(அ. சி.) அகலிடம் - உலகம் முழுதும். செறிந்துணர்ந்து - அன்பினால் உணர்ந்து. மதி மாண்டவர் - அறிவு கெட்டவர்.

(16)


2. திருவடிப்பேறு

1564. இசைந்தெழும் அன்பில் எழுந்த படியே
பசைந்தெழும் ஈசரைப் பாசத்துள் ஏகச்
சிவந்த குருவந்து சென்னிகை வைக்க
உவந்த குருபதம் உள்ளத் துவந்ததே.

(ப. இ.) திருவருள் வலத்தால் ஒத்து எழும் அன்பின்கண் அவ்வன்புருவாக விழைந்து எழும் சிவபெருமானை, மேலும் மேலும் முறுகி வளரும் அன்பின்வழிச் சென்று தொழுவர். தொழுவே, சிவபெருமான் சிவகுருவாக வந்து மும்மலங்களை அகற்றுவர். அகற்றி உச்சியின்கண் திருக்கையினைப் பொருந்துமாறு வைத்தருளுவர், அருளவே அவர்தம் திருவடி ஆவிகளின் உள்ளத்து இடனனைமந்து வெளிப்பட்டு அமரும்.

(அ. சி.) பசைந்து எழும் - விரும்பித் தோன்றுகிற. பாசத்துள் ஏக - அன்பின்வழிச் செல்ல. சிவந்த - அஞ்ஞானத்தைக் கோபித்த