(ப. இ.) நிலவுலகில் முடிசூடு மன்னராய்த் திகழ்ந்து வாழினும் சிவனடியார் பெறும் மாறா இனபம் அவர்களுக்கு இல்லை. அம் மன்னர்கள் உம்மை வாழ்வாகிய ஒளியுலக வாழ்வு எய்தினும் தேவராவர். (அந்நிலை மீண்டும் பிறப்பினைத் தரும்.) சிவபெருமான் அடியவராய் வாழ்பவர் தனிமுடி கவித்து ஆளும் அரசினும் இனியனாகிய சிவனடியின்பத்தினை இம்மையே நுகர்வர். அச் சிவனுக்கு நிலைபெற்ற குடியாக வாழும் அடியார் அறுபகை செற்று ஐம்புலன் அடக்கி நானெறி ஒழுகி மும்மலக் குற்றம் அற்று நின்றனர். அதனால் இருவகையாம் பிறப்பிறப்பற்று ஒன்றாம் சிறப்புற்றுத் திருவடியின்பத்து வாழ்வர். (12) 1576. வைத்தேன் அடிகள் மனத்தினுள் ளேநான் பொய்த்தே யெரியும் புலன்வழி போகாமல் எய்த்தேன் உழலும் இருவினை மாற்றிட்டு மெய்த்தேன் அறிந்தேனவ் வேதத்தின் அந்தமே.1 (ப. இ.) திருவருளால் திருவடியினிடத்தில் உள்ளம் வைத்தேன். அதனால் அவன் அருட்கண் பெற்றேன். அவ் வருட்கண் துணையினால் நிலையிலாப் பொருள்களை நிலையுள்ளனவாக விளக்கும் ஐம்புலன்வழிப் போகாமல் நின்றேன். நிற்கவே இருவினையின்கண் உழன்று பிறப்பு இறப்பு எடுத்து இளைத்துப்போகும் தன்மையினை மாற்றுநிலை எய்திற்று. அதனால் உண்மைத் திருவடியின்பத்தேனை உணர்ந்தேன். அத் தேனே உண்மையறிவின் முடிபாகும். வேதாந்தம் - உண்மையறிவின் முடிபு. தேனே சிவன் வண்ணம் தேற்றுமருள் வண்ணம்பால், மானே உயிர் பளிங்கு மற்றிரண்டும் சாரஇன்பமாம். (அ. சி.) அடிக்கண் - திருவடி ஞானத்தை பொய்....வழி - பொய்ப் பொருள்களில் பற்றுவைக்கும் ஐம்புலன் வழி. எய்த்தேன் - ஒழித்தேன். மெய்த்தேன் - உண்மை இன்பம். வேதத்தின் அந்தம் வேதத்தில் கூறப்பட்ட முடிவான பொருள். (13) 1577. அடிசார லாம்அண்ணல் பாத மிரண்டும் முடிசார வைத்தனர் முன்னை முனிவர் படிசார்ந்த இன்பப் பழவடி வெள்ளக் குடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே. (ப. இ.) நன்னெறிச் செல்வார் திருவருடடு்ணையல் திருவடி சேர்வர். பண்டைப் பழவடியாராகிய முழுநீறு பூசிய முனிவர்கள் சிவபெருமான் திருவடியிரண்டனையும் தம் முடிக்கு அணியாக அணிந்தனர். படிமுறையான் ஏற்றமாக எய்தும் இன்ப நிறைவினராகிய அடியாருள் இணங்கி வாழும் இன்பவெள்ளத்துள் மூழ்குதலே நன்னெறிச் செல்வார் கொள்கையாகும். நன்னெறி - சன்மார்க்கம். (அ. சி.) படிசார்ந்த - சோபான முறைப்படி அடையப்பட்ட. பழவடி இன்ப வெள்ளக்குடி - பழமையான மோக்க இன்பத்துள் மூழ்கும் அடியாரோடு. சார்நெறி - சேர்தற்குரிய சன்மார்க்கம். (14)
1.நானேயோ. 8. திருவேசறவு. 10.
|