623
 

அவா அறுத்தல் - வெறுக்கப்படுவது ஒன்று. ஆகப் பதின்மூன்றும் துறவு அறங்களாம்.

(2)

1590. அறவன் பிறப்பிலி யாரும் இலாதான்
உறைவது காட்டகம் உண்பது பிச்சை
துறவனுங் கண்டீர் துறந்தவர் 1தம்மைப்
பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே.2

(ப. இ.) இல்லற நெறியினிற்பாருடன் இயைந்து அறவன் என்னும் திருப்பெயர் பெறுகின்றான். தான் எல்லார்க்கும் துணைபுரிந்தருள்வதன்றி எவர் துணையும் வேண்டாத தனியன். அவன் இயல்பாகவே பாசங்களினின்று நீங்கினமையால் மாயாகாரிய உடம்பெடுப்பதாகிய பிறப்பில்லாதவன். அவன் ஊழிப்புறங் காட்டகத்து உறைபவன். அன்பரிடம் அன்பினையே பிச்சையாக ஏற்று உண்பவனும் அவனே. இந்நிலை பிறர்க்கென வாழும் பெருநிலையாகிய துறவு நிலையாகும். துறவு நிலையென்பது தீநெறிக்கட் செல்லாது நன்னெறிக்கட் செல்வது. இங்ஙனம் துறந்தார்தம் பிறவியை அறுத்திடும் பேரன்பினன் சிவன்; காண்பீராக.

(அ. சி.) காட்டகம் - உள்ளம். அறவன் - இல்லறவாசிகளுக்காக இல்லறங்களைக் கைக்கொண்டவன். துறவன் - துறவிகளுக்காகத் துறவு அறங்களையும் கைக்கொண்டவன்.

(30)

1591. நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்
நெறியில் வழுவின் நெருஞ்சில் முட்பாயும்
நெறியில் வழுவா தியங்கவல் லார்க்கு
நெறியின் நெருஞ்சில் முட்பாயகி லாவே.

(ப. இ.) அன்புநெறியாகிய இல்லறமும் அதன் முதிர்வாம் அருள் நெறியாகிய துறவறமும் இருகால்போல் அகம் புறம் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் நெறியாகும். அந்நெறியினைப் படைத்தவன் சிவனே. அந்நெறி நில்லாது தீநெறி நிற்பார் துன்புற்று அந் நெறிக்கு வருமாறு செய்ய நெருஞ்சில்போன்ற துன்ப நெறிகளையும் படைத்தளித்தனன். மெய்ந் நெறிக்கண் வழுவாது ஒழுகவல்லார்க்குப் பிறவித்துன்ப முதலிய எத்துன்பங்களும் எய்தா. அத் துன்பங்கள் நெருஞ்சிலாக உருவகப்படுத்தப்பட்டன.

(அ. சி.) நெறி - வழி. இம் மந்திரம் அறவழியிற் செல்லாதவர்களைத் துன்பம் சுடும் என்பதை உவமான முகத்தால் உணரவைத்தது.

(4)

1592. கேடுங் கடமையுங் கேட்டுவந் தைவரும்
நாடி வளைந்தது நான்கட வேனலேன்
ஆடல் விடையுடை அண்ணல் திருவடி
கூடுந் தவஞ்செய்த கொள்கையன் றானே.


1. துறந்தானை. அப்பர், 6. 66 - 6.

2. ஒப்பினை. 11. காரைக்காலம்மை, திருவாலங்காடு - 11.

" ஆதி. அப்பர், 5. 97 - 3.