625
 

(ப. இ.) தொன்மையிலேயே தொடக்கும் பற்றும் அறவே இல்லாத இயற்கை மயலில்லாத துறவி சிவபெருமான். அவன் மெய்யடியார்கட்கு ஆக்கமும் கேடும் இல்லாத அருட்பெரும் சோதி. அகத்தவமாகிய சிவயோகப் பயிற்சி முறையால் கூற்றுவனை வென்றவர்க்கு உற்ற தோழன்; அவா என்று சொல்லப்படும் பசைமலமும் இல்லாதவன். காரறிவாண்மையாகிய அறியாமையினின்று நீங்கிய ஆருயிர்க்குச் சிவன் கண்ணுதலாகிய உருவத் திருமேனி கொண்டருள்வன். உலகப்பற்று முற்றும் அற்றவர்க்குத் திருவடிப்பேறு எய்தும்.

(அ. சி.) மேல் துறந்த - இயற்கைத் துறவியாகிய. கூற்றுவன் நாள் துறந்தார்க்கு - யோகத்தால் எமனை வென்றவர்களுக்கு. கார் - அஞ்ஞானம். பார் - உலகப் பற்று.

(7)

1595. நாகமும் ஒன்று படம்ஐந்து நாலது
போகமுட் புற்றிற் பொருந்தி நிறைந்தது
ஆக மிரண்டும் படம்விரித் தாட்டொழிந்
தேகப் படஞ்செய் துடம்பிட மாமே.

(ப. இ.) ஆருயிர்கட்கு நாகம்போலும் உடம்பு ஒன்று. அதன் ஐந்து படம் போலும் ஐம்பொறிகள். அப் பொறிகள் வழியாக அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பயன்களையும் உயிர் நுகரும். உளப்புற்றாகிய உடம்பினது அகத்துப் பொருந்தி நிறைந்து நிற்பன் சிவன். நுண்மை முன்மையாகிய உடம்பு இரண்டினுள்ளும் படமாகிய பொறி வழிச் சென்று ஆடும் செயலறப் பாடஞ்செய்தலாகிய தகுதியுண்டாக்கி, அச் சிவபெருமான் அவ் வுடம்பினை இடமாகக் கொண்டருள்வன். நுண்மை - சூக்குமம். முன்மை - காரணம். படஞ்செய்து: பாடம் செய்து என்பதன் குறுக்கம்.

(அ. சி.) நாகம் - ஆன்மா. படமைந்து - ஐம்பொறிகள். நாலது போகம் - போகம் நான்கு: அறம், பொருள், இன்பம், வீடு. உட்புற்றில் சரீரத்தில். ஆகம் இரண்டு - சூக்குமம், காரணம். இரண்டு சரீரங்களிலும் - படம் விரித்தாட்டொழிந்து பொறிகளில் சென்று உழல்வதை ஒழிந்து. படம் செய்து பக்குவப்படுத்தி. உடம்பிடமாம் - உடம்பிலே நிலைத்திருக்கும்.

(8)

1596. அகன்றார் வழிமுதல் ஆதிப் பிரானும்
இவன்றா னெனநின் றெளியனும் அல்லன்
சிவன்றாள் பலபல சீவனு மாகும்
நயன்றான் வரும்வழி நாமறி யோமே.

(ப. இ.) அம்மையுடன் கூடிய அப்பனாகிய சிவனும் பற்றற்றார் வழிக்கு முதல்வன் ஆவன். அவன் இன்ன தன்மையன் என்றிசைக்கும் எளியனும் அல்லன். சிவன் தாளாகிய திருவருள் ஆருயிர்கட்கு ஏற்றவாறு பலவாக அமைந்து செவ்வி வருவிக்கும். நயமாகிய திருவடியுணர்வு திருவருளுணர்வா லுணரத்தக்கது. நாம் என்னும் அகச் செருக்கு உள்ளவரையும் அவ் வுயிர் ஆணவ முனைப்புடையது. அம் முனைப்பால் சிவனை உணரமுடியாதென்பதுதான், நாமறியோம் என்பது.