647
 

சித்தனுமாவன். உண்மைக்கோலம் இல்லாத ஏனைத் தவத்தர் இவனோடொத்துப் பேசுந் தகுதியினரல்லர்.

(அ. சி.) தானத்தில் - உலகத்தில். தனியாலயத்தன் - உள்ளம் பெருங்கோயிலாக உடையவன். ஏனைத் தவசி - பொய் வேடத்தையுடைய தவசி. இவன் - உண்மை வேடமுள்ள சித்தன்.

(7)

1647. தானற்ற தன்மையுந் தானவ னாதலும்
ஏனைய வச்சிவ மான இயற்கையுந்
தானுறு சாதக முத்திரை சாத்தலு
மேனமும் நந்தி பதமுத்தி பெற்றதே.1

(ப. இ.) யான், எனதென்னும் செருக்கற்ற தன்மையும், சிவனருளால் தான் சிவனாதலும், மற்றைய உலகிற் காணப்படும் இயங்கு திணை நிலைத்திணைப் பொருள்களனைத்தும் சிவத்தொடர்பால் செய்யுள் நலம்போல் சிவமாகக் காணப்படுதலும், தான்கொள்ளும் கோலத்துக்குத் தக்கவாறு துணையாகிய சாதகங்கொள்ளுதலும், உண்கலம் ஏற்றலும் முதலியன நந்தியாகிய சிவன் திருவடிநிலை பெற்றவர்கட்குரிய அடையாளங்களாகும். செய்யுள் பூமாலையொக்கும், உரைநடை பூச்சரமொக்கும். 'பூவுதிரப் போஞ்சரம் போற்றுமுரை நெஞ்சினில்லா, பூவுதிரா மாலைசெய்யுள் போற்று.'

(அ. சி.) தானற்ற தன்மை - 'யான்', 'எனது' என்னும் பற்று நீங்கின தன்மை தான் அவனாதல் - அவனே தானேயாகிய நெறி; தான் சிவமாந் தன்மை எய்தி நிற்றல். ஏனைய - தன்னைத் தவிர்த்து மற்றத் தாவர சங்கமங்கள். தானுரு - தான்கொண்ட. சாதக முத்திரை - வேடமும், பழக்கமும். ஏனமும் - பிச்சைப் பாத்திரமும்.

(8)


12. சிவவேடம்

1648. அருளால் அரனுக் கடிமைய தாகிப்
பொருளாந் தனதுடற் பொற்பதி நாடி
இருளான தின்றி யிருஞ்செயல் அற்றோர்
தெருளாம் அடிமைச் சிவவேடத் தோரே.

(ப. இ.) திருவட்டுணையால் சிவபெருமானுக்கு அடிமையாகி அச்சிவனார் உடைமையாகிய தன் உடல் அவர் உறையும் பொற்பதி என்று நாடுதலாகிய உண்மையுணர்வு கொள்ளுதலால் அறியாமையாகிய மலவிருள் அகலும். அகலவே தன் முனைப்பால் செய்யும் இருவகைச் செயல்களும் அகலும். அவை அற்றவர்கள் தெளிவினையுடைய மீளா அடிமையராவர் அவர்கொள்ளும் சிவக்கோலமே மெய்யான தவக்கோலமாகும்.

(அ. சி.) பொருளாம் - மெய்ப்பொருள் வெளிப்படுதற்குரிய. பொற்பதி - சிவம் தங்கும் அழகிய இடம். அருள் - அஞ்ஞானம்.

(1)


1. அவனேதானே. சிவஞானபோதம், 10.

" ஊனினுள். அப்பர், 4. 29 - 1.