695
 

(ப. இ.) எஞ்சுவினை, ஏறுவினையாகிய இருவினையும் அற்ற அப்பொழுதே அருளால் அச் சிவனை நான் அறிந்தேன் . வினைக்கீடாகத் துறக்கவுலகம் சென்று நல்வினைப் பயனாம் இன்பந்துய்த்து மீண்டும் பிறக்கும் நயனிலாத்தேவர் துறக்கவின்பினைமட்டும் அறிந்து செருக்கிச் சிவனை யறியாராயினர் . உடலை உயிருடன் பொருத்தி அவ்வுயிர்க்கு உயிராய் நின்றியக்குகின்ற அறிவுப் பெருஞ்சுடராகிய சிவபெருமானை, அவனருளால் மெய்யன்பு பூண்ட அடிமையாகிய அவனும் அறியானாயின் பின்னை யாரறிவார்.

(அ. சி.) அன்றே - கன்மம் ஒழிந்தபொழுதே. வான் அறிந்தார் - சுவர்க்க போகங்களை அறிந்தார்.

(6)

1767. அருளெங்கு மான அளவை யறியார்
அருளை நுகரமு தானதுந் தேரார்
அருளைங் கருமத் ததிசூக்க முன்னார்
அருளெங்குங் கண்ணான தாரறி 1வாரே.

(ப. இ.) திருவருளாற்றல் பிரிப்பின்றி எங்கணும் நிறைந்து நிற்கும் இயற்கை உண்மையினை உணரார் . அவ்வருளே திருவடி இன்பம் ஊட்டும் செவிலியாதலின், அதுவே உண்ணும் அமுதமாம் உண்மையினையும் உணரார். திருவருள் படைத்தல், காத்தல், துடைத்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களையும் அயன், அரி, அரன், ஆண்டான், அருளோன் என்னும் சிவன் ஆணைபெற்ற செவ்வுயிராகிய இவர்கண்மாட்டு இறைவன் மீநுண்மையாய் நின்று இயற்றுவிக்கும் எண்மையினையும் நினையார். அத்திருவருளே எங்கணும் நிறைந்து எவ்வுயிர்க்கும் அறிவுக்கு அறிவாய் நின்று இயக்குவதனை அவ்வருள் பெற்றவரே அறிவர் . மற்று யாரறிவார்? ஒருவரும் அறியார் என்பது குறிப்பெச்சம். நாள் விழா, சிறப்பு விழா, பயன் விழா, விலக்குச் செயல், கழுவாய்ச் செயல் என்னும் உலகோர் இயற்றும் ஐந்தொழிற்கும் அப்பால் நிற்பது திருவருள் என்பாரும் உளர். விலக்கு - நிசேதம்.

(அ. சி.) அருள் எங்கும் ஆன அளவு - திருவருள் எல்லையை, ஐங்கருமம் - ஆக்கலாதிய ஐந்தொழில் . கண் - அறிவு.

(7)

1768. அறிவில் அணுக அறிவது நல்கிப்
பொறிவழி யாசை புகுத்திப் புணர்ந்திட்டு
அறிவது வாக்கி அடியருள் நல்குஞ்
செறிவொடு நின்றார் சிவமாயி னாரே.

(ப. இ.) திருவடியணர்வாகிய அறிவில் ஆருயிர்கள் பொருந்த, அச் சிவன் அறிவுக்கு அறிவாய் நின்று அறிவினை அருளினன். அந்நிலை எய்துதற்குரிய பயில்வு கைக்கொள்ளும் பொருட்டுப் பொறிவழி விருப்பினை உயிர்க்குப் புகுத்தினன். தானும் அவ்வுயிரினோடு புணர்ந்து நின்றனன் . அவ் வருளின்வழித் திருவடி யுணர்வுபெற்றுத் திருவருள் நிறைவில் நிலைத்து நின்றார் அச் சிவமாகவே இருப்பர்.

(அ. சி.) அறிவில் - ஞானத்தில். செறிவு - நன்னெறி ஒழுக்கம்.

(8)


1. உணர்ப. சிவஞானபோதம், 6. 2 - 2.