699
 

1777. அருட்கண் ணிலாதார்க் கரும்பொருள் தோன்றா
அருட்கண் ணுளோர்க்கெதிர் தோன்றும் அரனே
இருட்கண்ணி னோர்க்கங் கிரவியுந் 2தோன்றா
தெருட்கண்ணி னோர்க்கெங்குஞ் சீரொளி யாமே.

(ப. இ.) திருவருட்கண் வாய்க்கப்பெறாதார்க்கு உண்மை அறிவு இன்ப உருவினனாகிய சிவபெருமான் தோன்றான். அரும்பொருள் - சிவன். அருட்கண் உள்ளோர்க்கு அரன் எதிர்தோன்றுவன். கண் குருடாகிய இருட்கண்ணினோர்க்கு யாவர்க்கும் வெளிச்சமாகிய ஞாயிறும் தோன்றாது. அஞ் ஞாயிறு குருடு நீங்கித் தெளிந்த கண்ணுடையார்க்குச் செவ்வையாகத் தோன்றும். அதுபோல் சிவனும் அருட்கண்ணினர்க்குத் தோன்றுவன்.

(அ. சி.) அருட்கண் - அருளைக்கொண்டு பார்க்கு கண். தெருட்கண் - ஒளியைக்கொண்டு பார்க்கும் கண்.

(17)

1778. தானே படைத்திடுந் தானே அளித்திடுந்
தானே துடைத்திடுந் தானே மறைத்திடுந்
தானே யிவைசெய்து தான்முத்தி தந்திடுந்
தானே வியாபித் தலைவனு மாமே.

(ப. இ.) எங்கும் நிறைந்து எவற்றினும் பிரிப்பின்றித் திகழும் சிவபெருமான், ஆருயிர்களின்மாட்டு வைத்த அரும்பெரும் தலையளியால் தூண்டுவாரும் வேண்டுவாரும் எவரும் இன்றியே அருளே துணையாகக் கொண்டு திருவுள்ளக்கருத்தானே படைப்புமுதல் வீடுபேறு ஈறாகவுள்ள எல்லாச் செயல்களையும் புரிந்தருள்வன். அவனே விழுமிய முழுமுதல்வனாவன். இறைவன் ஒருவனே முறையுற ஐந்தொழிலும் புரியும் நிறைவுடைமையான். ஏனை ஆணைக் கடவுளர் ஒவ்வொன்றே செய்யுமுரிமையர்.

(18)

1779. தலையான நான்குந் தனதரு வாகும்
அலையா வருவுரு வாகுஞ் சதாசிவம்
நிலையான கீழ்நான்கு நீடுரு வாகுந்
துலையா இவைமுற்று மாயல்ல 3தொன்றே.

(ப. இ.) தூமாயைக்கண் விளங்கும் அறிவு, ஆற்றல், ஒலி, ஒளி, ஆகிய நான்கும் சிவனுக்குரிய அருவநிலையாகும்; அருளோனாகிய சதாசிவன் அருஉருவ நிலையாகும்; ஆண்டான், அரன், அரி, அயன் ஆகிய நான்கு நிலையும் உருவநிலையாகும்; இவருள் அரன், அரி, அயன் என்னும் மூவரும் உடல்மெய்யாகிய மூலப்பகுதியில் அப் பெயர்களோடு ஆணையால் முத்தொழில்புரியும் மூவரையும் தொழில்படுத்துவோராவர்.


1. நாடியோ. சிவஞானபோதம், 9. 1 - 1.

2. அருக்கனேர்." 11. 2 - 1.

" இருடரு. அப்பர், 4. 92 - 4.

" நகல்வல்லர். திருக்குறள், 999.

3. சிவஞ்சத்தி. சிவஞானசித்தியார், 2. 4 - 1.

" சிவனரு. " 1. 3 - 10.