1782. விளையும் பரவிந்து தானே வியாபி விளையுந் தனிமாயை மிக்கமா மாயை கிளையொன்று தேவர் கிளர்மனு வேதம் அளவொன் றிலாவண்ட கோடிக ளாமே.1 (ப. இ.) பரவிந்துவாகிய தூமாயையைத் திருவருளாணை நேரே தொழிற்படுத்தும். அம் மாயை அவ்வாணையின் தொழிற்பாடுகள் எல்லாவற்றுக்கும் நிலைக்களமாய் நிறைவாய் நிற்கும். திருவருளாணை - சிவசக்தி. நிறைவு - வியாபகம். அவ் வாணையால் காரியப்படுவதே விளைவு. அவ்விளைவு, தூவாமாயை தூமாயை என இருதிறப்படும். இத் தூமாயை தேவர் இனங்களுக்கும், மந்திரங்களுக்கும், வேதாகமமாகிய முறை நூல் இறை நூல்கட்கும் இடமாம். அளவில்லாத அண்ட கோடிகளுக்கும். உடல், உறுப்பு, உலகம் உணவு ஆகிய நான்மையாக விளங்கும் பொருள்கட்கும் தூவாமாயை இடமாம். அண்டகோடிகள் என்பது அண்டங்களில் வாழும் உயிர்கள். அண்டங்களுக்கும் நிலைக்களமாக இடங்கொடுத்து இருப்பது திருவருளாணையே. (அ. சி.) மாயையின் பிரிவுகள் கூறப்பட்டன. பரவிந்து சுத்தமாயை என்றும், தனிமாயை அசுத்தமாயை என்றும், மாமாயை மூலப் பிரகிருதி என்றும் விளக்கப்பட்டது. (22)
10. அருளொளி 1783. அருளிற் றலைநின் றறிந்தழுந் தாதார் அருளிற் றலைநில்லார் ஐம்பாச நீங்கார் அருளிற் பெருமை யறியார் செறியார் அருளிற் பிறந்திட் டறிந்தறி வாரே. (ப. இ.) திருஆணையாகிய திருவருளில் உறைத்து நின்று அழுந்தி அறிதலாகிய அனுபவங்கெள்ளாதார், அத் திருவருளின்வழி ஒழுகார். அதனால் மருளின்வழி ஒழுகுவர். ஒழுகவே, ஆணவம், கன்மம், மாயை, மாயையாக்கம், நடப்பாகிய மறைப்பாற்றல் என்னும் ஐவகைப் பாசங்களும் நீங்கார். மறைப்பாற்றல் திருவருளேயாயினும் 'நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும், வாய்நாடி வாய்ப்பச் செய்யும்' மருத்துவன் போல் ஆருயிர்களோடு பாசங்களை இணைப்பித்து ஆணவத்தைத் தேய்ப்பித்துத் தூய்மைப்படுத்துதலால் அதுவும் மலமென்று ஏற்றிச் சொல்லப்படும். இஃது 'உற்றவன் தீர்ப்பான்' என்னும் மருந்து வகை நான்கனுள் தீர்ப்பானும் ஒரு மருந்தாகச் சேர்க்கப்பட்டிருப்பதை யொக்கும். திருவருளின் இயற்கை உண்மைப் பெருமையை உணரார், அதன் பெருநிறைவிலடங்கி நில்லார். இவ் வுண்மைகளைத் திருவருளோடிணங்கி அதன் துணையால் அறிதல் வேண்டும். பெருநிறைவு - வியாபகம். (அ. சி.) ஐம்பாசம் - ஐந்து மலம். (1)
1. விந்துவின். சிவஞானசித்தியார். 1. 1 - 19.
|