718
 

1823. மாத்திரை 1யொன்றினின் மன்னி யமர்ந்துறை
யாத்தனுக் கீந்த அரும்பொரு ளானது
மூர்த்திகள் மூவர்க்கு மூவேழ் குரவர்க்குந்
தீர்த்தம தாமது தேர்ந்துகொள் வீரே2

(ப. இ.) நுழைவு, நோன்பு, நுண்மை என்று சொல்லப்படும் சமயம், விசேடம், நிருவாணம் ஆகிய மூன்றும், குரு முழுக்கு என்று சொல்லப்படும் ஆசாரியபிடேகமும் பெற்ற நல்லாரை ஆத்தன் என்பர். அத்தனுக்கு உரியோன் ஆத்தன் என்பர். அந்நல்லார் உலகியலை ஆளுதலால் ஏற்படும் ஆண் என்னும் இரு மாத்திரையினின்றும் நீங்கித் திருவடியைப் பேணுவதால் அமையும் பெண்ணென்னும் ஒரு மாத்திரையாய் ஓங்கினர். அதனால் அவர் மாத்திரை எனவும் பெயர் பெறுவர். அவர்பால் சிவபெருமானும் இடையீடின்றி மாத்திரைக்குள் வெளிப்பட்டு நிலை நிற்பன். அத்தகைய நல்லார்க்கு அன்புடன் ஈந்த அரும்பொருள்கள் சிவபெருமானுக்கு நேராக ஈந்தனவேயாகும். மேலும் அப் பொருள்கள் அயன், அரி, அரன் மூவர்க்கும் தந்தையின் பெற்றோர், தாயின் பெற்றோர், மனைவயின் பெற்றோர் ஆகிய முத்திறத்து எழுவகையினர்க்கும் அன்னார் நன்னிலைக்கு உதவியாம் தூய பொருளாகும். இவ் வுண்மையினைத் தேர்ந்துகொள்வீராக. இதுவே திருவள்ளுவ நாயனார் அருளும் 'தென்புலத்தார்' கடனென்ப.

(அ. சி.) ஆத்தன் - மகேசுரன்; அஃதாவது சமயம், விசேடம், நிர்வாணம், ஆசாரி யபிடேகம் பெற்றவன். மூர்த்திகள் மூவர் - அயன், அரி, அரன். மூவேழ்குரவர் - தந்தை, தாய், மனைவி குடிவழியில் ஏழு தலைமுறையில் உள்ள மூதாதையர் (அஃதாவது பிதிர்க்கள், நம்மை விட்டுப் பிரிந்து போனவர்கள்).

(3)

1824. அகரம் ஆயிரம் ஆரியர்க் கீயிலென்
சிகரம் ஆயிரஞ் செய்து முடிக்கிலென்
பகரு ஞானி பகலூண் பலத்துக்கு
நிகரிலை என்பது நிச்சயந் தானே.3

(ப. இ.) பேர்கொண்ட பார்ப்பார் தங்குமிடம் அகரமாகும். அவர்க்கு அத்தகைய அகரம் ஆயிரம் ஈதலிலும், கோபுரத்துடன் கூடிய திருக்கோவிகள் ஆயிரமமைத்துக் கடவுள் மங்கலம் செய்வதினும், அருளொளி விளக்கத்தால் ஞானத்தின் திருவுருவாய் விளங்கும் சிவஞானிக்கு ஒரு பகலுணவு அளிக்கும் பேறு அளவிலாததாகும். அவ்விரண்டும் இப் பேற்றுக்கு ஒப்பாகாவென்பது ஒருதலை. ஒருதலை - நிச்சயம். ஈண்டுப் 'பகரும் ஞானி' என்பது புறத் திருக்கோலத்தால் மட்டுமன்றி அகத்தே இடையறா நினைவால் எழுந்தருளிவித்துள்ள சிவப்பொலிவால் அவர்தம் திருமேனி இவர் சிவஞானி என முன்வந்து தானே நவிலும் என்பதாம். திருவாயும் 'சிவசிவ' எனச் செப்பும்.

(அ. சி.) அகரம் - ஆரியப் பிராமணர் வசிக்கும் இடம்.

(4)


1. சாத்தி. 5; 60 - 3.

2. மூவேழ்சுற்றம். 8. போற்றித் - வரி, 198.

3. சிந்தையிடை. 12. சம்பந்தர். 270.