725
 

1841. தலைமிசை வானவர் தாழ்சடை நந்தி
மிலைமிசை வைத்தனன் மெய்ப்பணி செய்யப்
புலைமிசை நீங்கிய பொன்னுல காளும்
பலமிசை செய்யும் படர்சடை யோனே.1

(ப. இ.) தாழ்ந்த திருச்சடையினையுடைய நந்தியம்பெருமான் தலையால் வணங்கும் சிவவுலகினர்க்குத் தன் திருவடியை அவர்தம் முடிமேல் சூட்டியருளினன். திருவடியொன்றே அகந்தழீஇ மெய்ப்பணி செய்வார்க்கு மலகன்ம நீங்கிய தூமாயை உலகத்து இன்பப்பயன் அருள்வன். அவனே படர்சடைச் சிவபெருமானாவன்.

(அ. சி.) மிலைமிசை - மிசைமிலை, தலையில் அணியும்படி. புலை - குற்றம். பலமிசை செய்யும் - பயனை இசைக்கின்ற.

(11)

1842. அறியாப் பருவத் தரனடி யாரைக்
குறியால் அறிந்தின்பங் கொண்ட தடிமை
குறியார் சடைமுடி கட்டி நடப்பார்
மறியார் புனல்மூழ்க மாதவ 2மாமே.

(ப. இ.) இளம்பருவத்து அரனடியவர்களை அவர்கள் மேற்கொண்டுள்ள சிவத்திருக்கோலப் பொலிவால் சிவன் அடிமை கொண்டருள்கின்றனன். அந் நிலையிலும் ஒரு பேரின்பம் அளித்தருள்கின்றனன். கொன்றைச் சடையான் திருவடியை மறவா நினைவினர் என்பதன் புற அடையாளமே பின்னிய திருச்சடையுடையராய் ஒழுகுவர். அவர்தம் திருவடியினை விளக்கிய திருத்த நீரை அலைசேர் அரும்புனலாக மூழ்க, அதுவே இறப்பில் தவமாம். இதன்கண் நாயனார் அடியேன் எனத் தம்மைக் குறித்தார்.

(அ. சி.) அறியாப் பருவம் - இளமையில். குறியால் - சிவ சின்னங்களால். மறியார் - அலைகள் பொருந்திய.

(12)

1843. அவன்பால் அணுகியே அன்புசெய் வார்கள்
சிவன்பால் அணுகுதல் செய்யவும் வல்லன்
அவன்பால் அணுகியே நாடு மடியார்
இவன்பாற் பெருமை இலயம தாமே.

(ப. இ.) மேல் ஓதிய சிவனடியாரை அடைந்து, அவர்க்கு அன்பும் பணியும் இன்புறச் செய்வார், சிவபெருமான் திருவடியை நெருங்கவும் வல்லராவர். மேலும், அம் மெய்யடியாரைத் தொடர்ந்து நாடுபவர் சிறந்தோராவர். அவர்பால் முழுப்பெருமையும் தங்கும். சிவனடியார் வாயிலாகவே தாயிலாச் சிவனை ஏய்தலாம்.

(அ. சி.) அவன் - சிவனடியார். இலயமதாமே - அடங்குமே.

(13)


1. ஆவா. 8. திருத்தெள்ளேணம் 7.

2. விருப்பினால். 12. சம்பந்தர், 1234.