1853. அங்கார் பசியும் அவாவும் வெகுளியும் தங்கார் சிவனடி யார்சரீ ரத்திடைப் பொங்கார் புவனத்தும் புண்ணிய லோகத்துந் தங்கார் சிவனைத் தலைப்படு 1வாரே. (ப. இ.) சிறு தீயினையொத்த பசி, அவா, வெகுளி முதலான குற்றப்பாடுகளில் சிவனடியார்கள் ஒருசிறிதும் மனம் பொருந்தார். உடம்பு உடைமை முதலியவற்றில் பற்றுக்கொண்டு அவற்றை இறைவன் உடைமையெனவும், தமக்கு அவனால் கொடுக்கப்பெற்ற இரவலெனவும் கொள்ள வேண்டிய உண்மையை மறந்து, தம்மை மதித்து மனம் பொங்கிச் செருக்குறார். துறக்கவுலகம் சிவவுலகம் முதலிய எவ்வுலகத்துமுள்ள நிலையிலா இன்பத்தையும் கொள்ளார்; உள்ளார். சிவன் திருத்தாளே தலைப்படுவர். அத் திருவடியின்பே 'பேரா ஒழியாப் பிரிவில்லா, மறவா நினையா அளவிலா மாளாஇன்ப மாகடலாகும்.' (அ. சி.) பொங்கார் - பெருமை நிறைந்த. (5) 1854. மெய்யக ஞான மிகத்தெளிந் தார்களுங் கையக நீண்டார் கடைத்தலைக் கேசெல்வர் ஐயம் புகாமல் இருந்த தவசியார் வையகம் எல்லாம் வரவிருந் தாரே.2 (ப. இ.) உள்ளுணர்வாய் உண்மையாய்த் திகழும் திருவடியுணர்வு கைவரப்பெற்ற தெளிவுடையார்கள் சிவஞானி எனப்படுவர். அவர்கள் திருவடி இயக்கத்தால், மனையறம்புரியும் மாண்புசேர் நல்லார்வாழ் மனைத்தலைச் சேர்வர். அங்ஙனம் சேர்தல் அவர் நல்வழியானீட்டிய பொருளை நல்லுளத்தோடு நல்லுரை நவின்று நன்றாற்றி நல்கும் தானத்தைப் பெற்றுப் பயனீதற்பொருட்டு ஆகும். இதுவே அவர் மனைத்தலை சென்று பிச்சையுண்பதாம். வேறுசில சிவஞானிகள் தாம் தங்குமிடத்தே தங்கியிருப்பர். முன்னோதிய முறைப்படியுள்ள மனையறத்தார் சிவஞானி தங்குமிடத்தே கொண்டு வந்து பணிந்து படைப்பர். அதனையும் ஏற்று அருள்புரிவர். (அ. சி.) கையக நீண்டார் - கை + அகம் - நீண்டார், உள்ளன்போடு கொடுக்க முந்துவார். ஐயம்புகாமல் - பிச்சை எடுக்காமல், "இருக்குமிடம் தேடி என்பசிக்கே அன்னம் உருக்கமுடன் கொண்டுவந்தால் உண்பேன்" என்று இருக்கும.் (6)
1. முன்னம். அப்பர், 6. 25 -7. 2. இருக்கும். பட்டினத்துப் பிள்ளையார், பொது - 5.
|