19. சமாதிக் கிரியை 1873. அந்தமின் ஞானிதன் னாகந் தீயினில் வெந்திடி னாடெலாம் வெம்பும் தீயினில் நொந்தது நாய்நரி நுகரி னுண்செரு வந்துநாய் நரிக்குண வாகும் வையமே. (ப. இ.) என்றும் அழிவில்லாத திருவடியுணர்வு கைவரப்பெற்ற சிவஞானியின் திருமேனியினைக் கல்லறைப்படுத்தலாகிய சமாதியின்கண் வையாமல் தீயினில் வெந்திடச் செய்தால் நாடெல்லாம வெப்புநோய் மிகும்; அதனினும் கொடிய தொழுநோய்களும் மிகும்; அவற்றால் மக்கள் துன்புறுவர். மேலும் அத் திருமேனி புறத்தே வாளா எறியப்பட்டு நாய் நரியால் உண்ணப்படின், உலகத்தில் பெரும்போர் வந்து மக்கள் பலர் மாண்டு அவர்தம் உடம்புகள் நாய் நரிகளால் உண்ணப்படும். நீள் + உலகம் - நீணுலகம் என்பதுபோல், உள் + செரு - உண்செரு வென்றாயிற்று. (அ. சி.) உண்செரு - உள்நாட்டுக் கலகம். (1) 1874. எண்ணிலா ஞானி யுடலெரி தாவிடில் அண்ணல்தங் கோயில் அழலிட்ட தாங்கொக்கும் மண்ணின் மழைவிழா வையகம் பஞ்சமாம் எண்ணரு மன்னர் இழப்பார் அரசுமே.1 (ப. இ.) அளவிடுதற்கரிய திருவடியுணர்வு கைவரப்பெற்ற சிவஞானியரின் திருவுடல் எரியிலிடப்படின், அது சிவபெருமான் திருக்கோவிலின்கட் தீயிட்டதையொக்கும். அப் பெரும் பாவத்தால் மண்ணினில் மழை விழாது. அதனால் நீங்கா வற்கடமாம் பெரும்பஞ்சமும் உண்டாகும். அளவிலா மன்னரும் தத்தம் அரசினையுமிழப்பர். (2) 1875. புண்ணிய மாமவர் தம்மைப் புதைப்பது நண்ணி யனல்கோக்கில் நாட்டில் அழிவாகும் மண்ணி லழியில் அலங்கார பங்கமாம் மண்ணுல கெல்லாம் மயங்குமனல் மண்டியே. (ப. இ.) சிவஞானியின் திருமேனியைப் புதைத்துத் திருக்கோவிலமைப்பது பெரும் சிவபுண்ணியமாகும். அப்படிச் செய்யாமல் தீயின்கண் இட்டால் நாட்டுக்குப் பெரும் அழிவு உண்டாகும். மேலும் அத்திருமேனி ஓம்புவாரற்று மண்ணினில் கிடந்து அழியின் நாட்டின் அழகெலாம் பாழ்பட்டு நாடும் வீழ்ச்சியுறும். தணியா வெப்பும், தீயும் பிணியும் பிறவும் மண்ணுலகம் எங்குமாகிப் பெருந்துன்புண்டாகும். (அ. சி.) அனல் கோக்கின் - தீயிட்டால். அலங்கார பங்கம் - நாடு அழியும். (3)
1. செய்ய. சம்பந்தர், 3. 51 - 1.
|