744
 

1890. அந்தமும் ஆதியு மாகிப் பராபரன்
வந்த வியாபி யெனலாய வந்நெறி
கந்தம தாகிய காரண காரியந்
தந்தைங் கருமமுந் தான்செய்யும் வீயமே.

(ப. இ.) காரண காரியமாகிய முதல் விளைவுகளுக்கு எண்ணத்துணையாய்நிற்கும் முழுமுதற்சிவன் பராபரன் எனப்படுவன். அவன் எங்கும் நீக்கமற நிறைந்துநிற்கும் வியாபியாவன். அந்நிலையில் மணஞ்சேர் காரணகாரிய முதல்வராய்த் திருத்தொழில் ஐந்தினையும் இடையறாது புரிவன். இவையே அவன்றன் அளவில் பெருமையாம். வீயம். வியம் - பெருமை. வியம், வீயமானது செய்யுட்டிரிபு.

(அ. சி.) கந்தமதாகிய - வாசனை பரவிய. வீயம்: வியம் என்பதன் நீட்டம். வியம் - பெருமை.

(5)

1891. வீயம தாகிய விந்துவின் சத்தியால்
ஆய வகண்டமும் அண்டமும் பாரிப்பக்
காயஐம் பூதமுங் காரிய 1மாயையில்
ஆயிட விந்து அகம்புற மாகுமே.

(ப. இ.) பெருமை உடைத்தாகிய விந்துவின் ஆற்றலால் அகண்டமும் அண்டமும் ஆகிய அனைத்து ஆக்கப்பாடுகளும் உண்டாவன. ஆகாய முதலிய ஐம்பூதமுள்ளிட்ட முப்பத்தொரு மெய்களும் தூமாயையாகிய விந்துவின் காரியம் போன்ற படங்குடிலானாற்கோலும் வளர்ச்சியன்று. பால் தயிரானாற் போன்ற திரிபு. இதனைத் தூவாமாயை என்பர். இவை தூமாயையின் கீழ்ப் பகுதியாகும். இவ் விந்து முப்பத்தாறு மெய்களுக்கும் அகம் புறம் என்ப. விந்து எனினும் காரணமாயை எனினும் ஒன்றே.

(அ. சி.) காய ஐம்பூதம் - ஆகாய முதலாம் ஐம்பூதம். காரிய மாயை - விந்துவின் விகாரமான அசுத்த மாயை.

(6)

1892. புறமகம் எங்கும் புகுந்தொளிர் விந்து
நிறமது வெண்மை நிகழ்நாதஞ் செம்மை
உறமகிழ் சத்தி சிவபாத மாயுட்
டிறனொடு வீடளிக் குஞ்செயற் கொண்டே.

(ப. இ.) மேலோதியவாறு விந்து புறமகம் எங்கும் விரவி ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. விந்துவின் நிறம் வெண்மை. நாதத்தின் நிறம் செம்மை. அறிவாற்றல்களால் ஆருயிர்களை மகிழ்விக்க மகிழும் சத்தி சிவம் இரண்டற்கும் முறையே விந்து நாதம் பதிந்த நிலைக்களமாகும். பதிவு - நிலைப்பு. பதிவு பாதமென்றாயிற்று. உயிர்க்குயிராயுணர்விற்குணர்வாய் உண்ணின்று பேறருளும் அருளிப்பாடுகொண்டே இவையனைத்தும் நிகழ்கின்றன.

(7)


1. நித்தமா. சிவஞானசித்தியார், 2. 3 - 3.