745
 

1893. கொண்டஇவ் விந்து பரமம்போற் கோதற
நின்ற படங்கட மாய்1 நிலை நிற்றலிற்
கண்டக லாதியின் காரண காரியத்து
அண்டம் அனைத்துமாய் மாமாயை 2யாகுமே.

(ப. இ.) இவ் விந்து முழுமுதற்சிவன் முதலுமீறுமின்றித் தொன்மையாய் இருப்பதுபோல் விந்துவும் தொன்மையேயாம். ஆவிகளின் ஆணவக்குற்றமற நிற்பது இவ் விந்து, இதன்கண்ணின்றும் படமாகிய சீலையும், கடமாகிய ஏனமும் முதலியன தோன்றும். (அங்ஙனம் தோன்றுவதும் திருவருளாற்றலான் என்க.) இயக்கிக் காணச்செய்யும் ஐவகைத் திருவருளாற்றலாம் கலைகளால் காரணகாரியத் தொடர்பாய் மாமாயையினின்றும் தோன்றும்.

(அ. சி.) பிரமம்போல் அல்லது பரமம்போல் - சிவத்தைப்போல. படம் கடம் - வேட்டி, மட்குடம்.

(8)

1894. அதுவித்தி லேநின்றங் கண்ணிக்கு 3நந்தி
இதுவித்தி லேயுள வாற்றை யுணரார்
மதுவித்தி லேமல ரன்னம தாகிப்
பொதுவித்தி லேநின்ற புண்ணியன் தானே.

(ப. இ.) மேலோதிய காரணமாகிய விந்துவில் நாதமாகிய சிவன் விரவிப் பிரிப்பின்றிக் கலந்துநிற்கின்றனன். இந்த முறையாக மாயை தொழிற்படும் இயற்கை உண்மையினை உணரார். தேனுக்குக் காரணமாயுள்ளது மலர்; அஃது ஈண்டு மலர்வித்தெனப்பட்டது. அஃது ஈண்டு உச்சித் துளைமேற்கொள்ளப்படும் ஆயிர இதழ்த் தாமரையினைக் குறிக்கும். அத் தாமரைமீது மகிழ்ந்தமரும் அன்னத்தைப் போன்று போகமீன்ற புண்ணியனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருள்கின்றனன். அதுபோன்று பொன்னம்பலத்தின் கண்ணும் நின்றருள்கின்றனன்.

(அ. சி.) அதுவித்தில் - அந்த விந்துவாகிய வித்தில். அண்ணிக்கும் - கலந்திருக்கும். மதுவித்திலே மலர் - மதுவுக்குக் காரணமாகிய மலர். பொது வித்து - புருவ மத்தி அல்லது சிற்சபை.

(9)

1895. வித்தினி லன்றி முளைவில்லை அம்முளை
வித்தினி லன்றி வெளிப்படு மாறில்லை
வித்தும் முளையும் உடனன்றி வேறல்ல
அத்தன்மை யாகும் அரனெறி 4காணுமே.

(ப. இ.) வித்தும் முளையும் இருபொருளாக உடன்தோன்றுவன அல்ல. வித்தை நிலைக்களமாகக்கொண்டு முளை உள்ளடங்கி இருக்கும்.


1. உள்ளது. சிவஞானசித்தியார், 1. 1 - 6.

2. மாயைமா. சிவப்பிரகாசம், 7. 2.

" மாயா. சிவஞானபோதம், 4. 2 - 1.

3. ஆலைப்படுகரும். அப்பர், 6. 52 - 2.

4. வித்துண்டா. சிவஞானபோதம், 1. 2 - 1.