(ப. இ.) சிவபெருமான் நூலறிவாகவல்லாமல் நுண்ணறிவாக ஆருயிரினுடன் ஒற்றித்து நின்றருள்வன். நுண்ணறிவென்பது அழுந்தி அறிவதாகிய அனுபவ அறிவாகும். அச் சிவபெருமான் வேறுபாடின்றி எல்லாவுலகங்களிலும் ஆணை செல்லா நிற்க அருள்வன். அவனருளாலன்றி ஆருயிரின் முனைப்பால் அறியமுடியாத எல்லாத் திசைகளிலும் நீக்கமற நிறைந்து நிற்கின்ற பேரொளியாய் விடுவன். இம் முறையால் சிவபெருமானே விழுமிய முழுமுதல் தலைவனாவன். தேரறியாத என்பதற்குத் தேரையுடைய ஞாயிறும் அறியமுடியாத என்றலும் ஒன்று. (24) 1962. மண்டலத் துள்ளே மலர்ந்தெழும் ஆதித்தன் கண்டிடத் துள்ளே கதிரொளி யாயிடுஞ் சென்றிடத் தெட்டுத் திசையெங்கும் போய்வரும் நின்றிடத் தேநிலை நேரறி வார்க்டகே. (ப. இ.) மண்தலமாகிய நிலவுலகத்துள்ளே விளங்கித் தோன்றும் ஒளியுடையது ஞாயிறு. இதுவே மூலத்திடத்து விளங்கும் ஞாயிறுமாகும். அதுவே மிடற்றினிடமென்று சொல்லப்படும் விசுத்தியின்கண் கதிர்காலும் ஒளியாய்த் திகமும். அவ் வொளி எல்லாத் திசைகளிலும் உலாவி விளங்கும். திருவருளால் நின்ற இடத்திலே நின்று திருவடியுணர்வால் எல்லாங் காண்பார்க்கு இவ் வுண்மை எளிதிற் புலனாம். (அ. சி.) மண்டலத்துள்ளே - மண் தலத்துள்ளே, பூமியிலே. கண்டிடத்துள்ளே - கண்ட இடத்துள்ளே, விசுத்தியில். (25) 1963. நாபிக்கண் ணாசி நயன நடுவினுந் தூபியோ டைந்துஞ் சுடர்விடு சோதியைத் தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும் மூவரு மாக வுணர்ந்திருந் தார்களே. (ப. இ.) ஆருயிர் உறையும் சீரிய உடலகத்துக் கொப்பூழ், கண், நாசி, புருவநடு, உச்சித்துளை என்று சொல்லப்படும் ஐந்திடத்தும் உயிருக்கு உயிராய் அறிவுக்கு அறிவாய் ஒளிகொடுத்தருளும் சிவபெருமானைத் தூமாயையின்கண் வீற்றிருக்கும் அரன், அரி, அயன் என்று சொல்லப்படும் மூவருமாக மெய்யுணர்ந்தோர் உணர்ந்திருந்தாரென்க. தூபி - உச்சித்துளை. (அ. சி.) நாபி - கொப்பூழ். கண், நாசி. நயன நடு - புருவமத்தி. தூபி - சிரம். ஈசன் - மகேசன். (26) சிவாதித்தன் 1964. அன்றிய 1பாச இருளுமஞ் ஞானமுஞ் சென்றிடு ஞானச் சிவப்பிர காசத்தால் ஒன்று மிருசுட ராமரு ணோதயந் துன்றிருள் நீங்குதல் போலத் தொலைந்ததே.
1. ஒன்றறிந்ததொன். சிவஞானபோதம், 3. 3 - 1. " அன்றினவர். அப்பர், 6. 93 - 4.
|