(ப. இ.) அணுவாகிய ஆருயிர்க்கு உயிராய் நுண்ணியனாய் விளங்குபவன் ஆதியாகிய அம்மையையுடைய சிவபெருமான் ஆவன். அவனைத் திருவருளுணர்வால் அளவின்றி நுணுகி ஆராயவல்லார்கட்கு அணுவுக்கு அணுவாய்த் திகழும் சிவபெருமானை அணுகுவது கைகூடும். அணுகுவது - மாணடி சேர்வது. (4) 1972. படர்கொண்ட ஆலதின் வித்தது போலச்1 சுடர்கொண் டணுவினைத் தூவழி செய்ய இடர்கொண்ட பாச இருளற வோட்டி நடர்கொண்ட நல்வழி நாடலு மாமே. (ப. இ.) விழுது ஊன்றி விரிவாய்ப் படர்ந்திருக்கும் ஆலமரத்தின் தன்மை முற்றும் அதன் வித்தின்கண் அடங்கியிருப்பதுபோல், திருவருள் ஒளியினைக்கொண்டு அணுவாகிய ஆருயிர் உய்யச் செந்நெறியினைத் தம் திருவுள்ளத்தமைத்தனன் சிவன். அத் திருவருளின் துணையால் அந் நன்னெறியிற் சென்று எந்நாளும் துன்பத்தை மிகுவிக்கும் பாச இருளை முற்றாக ஓட்டுதல் வேண்டும். ஓட்டி அகத்தும் புறத்தும் ஐந்தொழிற்கூத்து இயற்றியருளும் திருவடிசேர் திருநெறியை நாடுவது நாடற்கரிய பெருநன்மையாகும். (அ. சி.) படர்கொண்ட ஆல் - விழுதுவிட்டுப் படருந் தன்மையுள்ள ஆலமரம். சுடர்கொண்டு - அருள் ஒளியினால். விடர்கொண்ட - அநாதியே பந்தித்துள்ள. நடர் - அம்பலக் கூத்தர். (5) 1973. அணுவுள் அவனும் அவனுள் அணுவுங் கணுவற நின்ற கலப்ப துணரார் இணையிலி யீச னவனெங்கு மாகித் தணிவற நின்றான் சராசரந் 2தானே. (ப. இ.) மிகவும் நுண்மையாகிய அணுவாம் உயிரினுள் சிவபெருமானும், அச் சிவபெருமானிடமாக ஆருயிரும் வேறறக் கலந்து நிற்கும் கலப்புச் சொல்லொணாதென்க. ஆயினும் திருவருட்கண்ணால் அஃதுணர்தல்வேண்டும். அங்ஙனம் உணராதார் செந்நெறிக்குச் சேயராவர். சிவபெருமான் ஒப்பில்லாதவன். அவன் எங்கும் எல்லையின்றிக் கலந்து நிற்கின்றான். அம் முறையால் அவனே இயங்குதிணையும் நிலைத் திணையுமாகிய எல்லாப் பொருள்களுமென்று நல்லாரால் சொல்லப்படுகின்றனன். (அ. சி.) அவன் - சிவன். கணு - பேதம். தணிவு - எல்லை. (6) சீவன் 1974. மேவிய சீவன் வடிவது சொல்லிடில் கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு மேவிய கூறது ஆயிர மாயினால் ஆவியின் கூறுநூ றாயிரத் தொன்றாமே.
1. தெள்ளிய. நறுந்தொகை, 17. 2. தாபர. சிவஞானசித்தியார், 2. 2 - 25.
|