78
 

180. அப்பினிற் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பெனப் பேர்பெற் றுருச்செய்த1 அவ்வுரு
அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோற்
செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே.

(ப. இ.) அப்பாகிய தண்ணீரில் அதன்கண் விரவி நுண்ணிதாகி அடங்கி நிற்கும் உப்பு கூர்மையெனப்படும். அக் கூர்மை ஞாயிற்றின் வெம்மையால் பிரிந்து உப்பெனப் பெயர் பெறும். அவ் வுப்பினால் ஓர் உருச்செய்து மீண்டும் அவ் வுருவினை அந் நீரினில் கரையவிட்டால் நீருடன் கலந்து வேறு தோன்றாது ஒன்றாய் அடங்கிநிற்கும். அதுபோல் சொல்லுமிடத்து ஆவி சிவத்துள் அடங்கும். இவ்வொப்புச் சிவஞான போதத்தின்கண் ஏழாம் நூற்பாவில் மூன்றாம் கூறில் 'மெய்ஞ்ஞானம்' என்னும் எடுத்துக்காட்டு வெண்பாவில் மலமும் உயிரும் கலந்த கலப்புக்குக் காட்டப்பட்டுள்ளது. எங்ஙனமாயினும் இருபொருள் ஒன்றாய்க் கலந்து ஒன்றினுள் ஒன்று அடங்கி இரண்டுங்கெடாது ஒன்றாய்த் தோன்றுதற்குப் பொருத்தமான ஒப்பு இதுவென்க.

(அ. சி.) கூர்மை - உப்புத்தன்மை.

(24)

181. அடங்குபே ரண்டத் தணுஅண்டஞ் சென்றங்
கிடங்கொண்ட தில்லை இதுவன்றி வேறுண்டோ
கடந்தொறும் நின்ற உயிர்கரை காணில்
திடம்பெற நின்றான் திருவடி தானே.

(ப. இ.) எல்லாம் அடங்கும் இயல்பு வாய்ந்த பேரண்டத்தினுள் சிறிய அண்டங்கள் சென்று ஒன்றாய்ப் பின்னிக் கலந்து இடங்கொண்டதில்லை. இத்தன்மையன்றி மாயா காரிய அறிவில் பொருள்களுக்கு வேறொரு நிலையும் இல்லை. உடல் தொறும் நின்ற உயிர் திருவருளாற் சென்றுசார் கரையினை எண்ணும், எண்ணிக் காணுங்கால் மாறுதல் இன்றி ஏனைய உயிர்களும் தன்னைப்போல் உறுதிபெற உன்னும். உன்னி என்றும் ஒன்றுபோல் நிற்பதன் பொருட்டு நிலைபெற்று நின்ற சிவபெருமான் திருவடியே அளவிலாக் கரையாகும் என்னும் உண்மை கடைப்பிடிக்கும். அண்டஞ் சென்று - விண்ணிற் புகுந்து எனலுமாம். இடம் - வேறிடம். கரை - வீடுபேற்றெல்லை.

(அ. சி.) கடம் - உடம்பு.

(25)

182. திருவடி யேசிவ மாவது தேரில்
திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.

(ப. இ.) திருவருள் உணர்த்த முப்பொருள் உண்மையினை நன்னெறி நான்மையான் வழிநின்று திருவைந்தெழுத்தின் வைத்து


1. சிவனெனவே. திருக்களிற்றுப்படியார், 91.