(ப. இ.) ஆவி ஆக்கையை விட்டு அகலுங்காலத்து ஐம்மேலுந்தும். ஐ - கோழை. அதுவே சீக்கை எனப்பட்டது. அக் கோழையும் மிகுந்தது. ஊழ்வினைமூட்டு இற்றது. அதனால் ஆக்கையாகிய உடம்பும் பிரிந்தது. பக்கங்களிலுள்ள முப்பத்திரண்டு பழுக்களும் பயனற்றுப் பழுத்தன. ஆவி அகத்ததோ புறத்ததோ என்று அறிதற் பொருட்டுக் கிடக்கும் உடம்பின் மூக்கின்மேல் கைவைத்து உயிர்ப்பு உளதா என்று பார்ப்பர். உயிர்ப்பு நின்று விட்டது கண்டதும் உடலினைத் தூய வெள்ளிய ஆடையினால் முற்றாக மூடிக்கொண்டு போய்ச் சுடுகாட்டிலிடுவர். ஆங்குச் செய் கரணங்களுள் காக்கைக்குப் பலியிடுதலும் ஒன்று. அதனையும் காட்டுவர். கரணம் - சடங்கு. உடம்பினை புறச் சமயத்தோர் சுடாது காக்கை முதலியவற்றிற்குப் பலியாக இடுவது போன்றதன்று இப்பலி. இது சோறு முதலியவற்றைக் காக்கைக் கிடுவது. (அ. சி.) சீக்கை விளைந்தது - உயிர் உடலினின்றும் பிரியும் காலம் நேர்ந்தது. செய்வினை மூட்டிற்ற - ஊழ் கழிந்தது. மூக்கினில் கை வைத்து - உயிர் இருக்கிறதா? இல்லையா? என்று மூக்கினில் கை வைத்துப் பாாத்தல். காக்கைப் பலி - ஈமக்கடன் செய்யும்போது பிண்டமிட்டுக் காக்கைகளுக்குப் போடுதல். (5) 192. அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார் இடப்பக்க மேஇறை நொந்தது என்றார் கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே. (ப. இ.) இன்னின்ன வகையான சுவையுணவு வேண்டுமென விழைந்து கூறிச் சமைப்பித்து, வைத்தனர். அவ்வுணவினை அமர்ந்து இல்லாள் ஊட்ட மகிழ்ந்து உண்டனர். அகத்துள்ள கற்பிற் சிறந்த பொற்புறு மனைவியாருடன் மறைமுறைச் சூழ்வினையைத் தம்பயன் நாடிச் சூழ்ந்தனர். அவ்வளவில் ஐயோ உயிர் நிலைக்களமாகிய நெஞ்சஞ் சேர் இடப்பக்கம் சிறிது நொந்ததே என்றனர். கைத்தாங்குதலாகக் கிடத்தப் படுத்தனர். ஒரே கிடப்பாய் அப்பொழுதே இறந்தொழிந்தனர். இறை - சிறிது. இஃது 'இறைகளோ டிசைந்த இன்பம்' என்பதன் கண்ணும் காண்க. (அ. சி.) அடப்பண்ணி வைத்தார் - பலகாரம் செய்தார். மந்தணம் - மந்தனம் என்ற சொல்லின் திரிபு; மந்தனம் - ஆலோசனை. (6) 193. மன்றத்தே நம்பி மாடம் எடுத்தது மன்றத்தே நம்பி சிவிகை1 பெற் றேறினான் மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான் சென்றத்தா வென்னத் திரிந்திலன் தானே. (ப. இ.) நம்பி திருமணத்தின் பின் மனையறம் புரக்கப் புதுமாடம் எடுத்தனன். திருமணம் பலர் நடுவே நிகழ்வதால் அதுமன்றம் என அழைக்கப் பெறும். பலர்க்கும் கல்வி கலியாணம் நில்லாவுலகம் நீங்கு
1. அரிசனம் சிவஞானசித்தியார், 2 - 4
|