862
 

(ப. இ.) திருவருள் துணையால் முப்பத்தாறு மெய்களின் உண்மை யுணர்ந்து இவையனைத்தும் நாமல்லவென்றும், நம்மால் ஆக்கப்பட்டன வல்லவென்றும், சிவபெருமானால் ஆக்கி அளித்தருளப்பட்ட இரவற் பொருளென்றும், அவன் திருவுள்ளத்தின்படி அவற்றைப்பேணி அவன் திருத்தொண்டினுக்கே ஒப்புவிப்பது நம் கடமையென்றும் நாளும் கொண்டொழுகும் செம்பொருட்டுணிவினர்வழி அவைநின்று ஒளியாய்த் திகழும். அத்தகையோர் திருவடியுணர்வாகிய சிவஞானம் கைவரப் பெற்ற நல்லோராவர். வித்தகர் - செயற்கரும் செய்கை செய்யும் நல்லார். அவர் சிவமென விளங்கி வீற்றிருப்பர். நிலையிலாத பயனைத் தந்தழியும் தவம் பொய்த்தவம். அத் தவங்கள் போயகலும். அகன்றவிடத்து உண்மையாக நிலைபெற்றுநிற்கும் பெரும்பொருட் கிளவியான் சிவன். அவனே அகர எழுத்திற்கு உரிய முதல்வன்.

(அ. சி.) வித்தகன் - ஞானி. அகாரம் - சிவம்.

(13)

2141. அறிவொன் றிலாதன ஐயேழு மொன்றும்
அறிகின்ற என்னை அறியா திருந்தேன்
அறிகின்றாய் நீயென் றருள்செய்தார் நந்தி
அறிகின்ற நானென் றறிந்துகொண் 1டேனே;

(ப. இ.) முப்பத்தாறு மெய்களும் அறிவில்லாத பொருள்கள். இவற்றொடு விரவிநின்ற ஆருயிர்கள் இவற்றின் உண்மையினை அறியாதிருந்தன. அதனால் அவைகள் தம்மைப் பற்றியும் அறிந்தில. சிவபெருமானாகிய நந்தி திருவருளால் இவ் வுண்மைகளை உணர்த்தியருளினன். அம்முறையான் அவை அறிந்தன. அதுபோல் யானும் அறிந்து கொண்டேன் என்க.

(அ. சி.) ஐ ஏழும் ஒன்றும் - 36.

(14)

2142. சாக்கிர சாக்கிர மாதி தனில்ஐந்தும்
ஆக்கு மலாவத்தை யைந்து நனவாதி
போக்கி யிவற்றொடும் பொய்யான வாறாறு
நீக்கி நெறிநின்றொன் றாகியே நிற்குமே.

(ப. இ.) நனவின் நனவு முதலாகச் சொல்லப்படும் ஐம்பாடுகளும், புலம்புடன்கூடி எய்தும் ஐம்பாடுகளும், நனவு முதலாகச் சொல்லப்படும் ஐந்தும் தனக்கு வேறானவை என்னும் உண்மை கண்டுணர்ந்துநீங்கி நிலைபேறில்லாத முப்பத்தாறு மெய்களும் அங்ஙனமே வேறெனக் கண்டு நீங்கினோன் செந்நெறியில் நிற்போனாவன். அவன் திருவருளால் சிவத்துடன் ஒன்றி ஒன்றாகியே நிற்பன்.

(அ. சி.) மலாவத்தை - கேவலாவத்தை.

(15)


1. கருவியா. சிவஞானசித்தியார், 4. 1 - 1.

" அறியாத. தாயுமானவர், 27. பாயப்புலி - 30.

" உலகமெலாம். சிவப்பிரகாசம், 16.

" யாவையும். சிவஞானபோதம், 7.