872
 

2166. அறிவறி கின்ற அறிவு நனவாம்
அறிவறி யாமை யடையக் கனவாம்
அறிவறி யவ்வறி யாமை சுழுத்தி
அறிவறி வாகு மான துரியமே.

(ப. இ.) சிற்றறிவு திருவருளால் முற்றறிவின்கண் ஒடுங்கிநின்று அவ் வறிவினை அறிதல் அறிவின்கண் நனவாகும். அறிவிற் கனவு அவ்வறிவினை அறிகின்றோம் என்னும் எண்ணமும் தோன்றாது அவ்வறிவின்கண் ஒடுங்குதல். அறிவுறக்கம் தன்னறிவு அவ் வறிவின்பின் செல்லுதலால் அவ் வறிவேயாய்த் தன்னை மறத்தலாகும். அறிவுப் பேருறக்கம் பரமாகிய சிவன் தோன்றுதலாகும்.

(20)

2167. தானெங்கு மாயவ னைம்மலம் தான்விட்டு
ஞானந் தனதுரு வாகி நயந்தபின்
தானெங்கு மாய்நெறி நின்றது தான்விட்டு
மேனந்தச் சூக்க மவைவன்ன மேலிட்டே.

(ப. இ.) ஆருயிரின் உண்மைத்தன்மை எங்கும் பரம்பிநிற்கும் பெருநிலையாகும். அது, சிவகுருவின் அருளால் எய்தும். அந் நிலைமை ஐம்மலத் தொடர்பால் எய்தாதாயிற்று. 'தான் எங்குமாயவன்' என்பதற்கு எங்குமாம் தன்மையுடையவன் என்பது பொருள். சிவ குருவின் அருளால் தான் எங்குமாம் என்னும் உண்மையெல்லாம் தோன்றப்பெறும். பெறவே தான் ஐம்மலத் தொடக்கினின்றும் நீங்கி உண்மையறிவே தன்னுருவாகவே நிற்கும். அந் நிலைமையினை நயந்த பிற்பாடு தானெங்குமா யிருக்கும் இயல்புண்மையினை யுணரும். உணரவே தான் ஐம்புலவேடர் வழிச்சென்ற நெறிவிட்டு அகலும். மேல் பொருந்தக்கூடிய நுண்ணிய நிலையினையும் எய்தும். சூக்கம் - நுண்மை. அந் நிலைமையின் தன்மையாய் மேலிட்டு விளங்கும். வன்னம் - தன்மை.

(அ. சி.) ஐம்மலம் - ஐந்து மலங்கள். அவை வன்மை - அவை எல்லாவற்றின் தன்மை.

(21)

2168. ஐயைந்து மாறுமோ ரைந்து நனாவினில்
எய்யு நனவு கனவு சுழுத்தியா
மெய்யும்பின் சூக்கமும் மெய்ப்பகுதி மாயை
ஐயமுந் தானவ னத்துரி யத்தனே.

(ப. இ.) அருஞ்சைவர் மெய்கள் முப்பத்தாறாகும். அவற்றுள் உடல்மெய் இருபத்துநான்கு ஆள் ஒன்று ஆகிய இருபத்தைந்து மெய்களுள் இயைந்து தொழிற்படும் நிலை நனவு நிலையாகும். உணர்வுமெய் ஏழனுள் ஆள் ஒழித்து ஒழிந்த ஊழி, ஊழ், உழைப்பு, உணர்வு, உவப்பு, மருள் என்னும் ஆறு மெய்கள்மட்டும் தொழிற்படும் நிலை கனவுநிலையாகும். உணர்த்து மெய்யாகிய அத்தன் அன்னை அருளோன் ஆண்டான் ஆசான் என்னும் ஐந்து மெய்களுடன் மட்டும் தொழிற்படும் நிலை உறக்கமாகும். பேருறக்கத்தின்கண் நுண்ணுடலும் மூலப்பகுதியும் சேர்ந்த