யில்ஆருயிர்க்கிழவன் சேர்வன். சேர்ந்தபிற்பாடு முத்திறப்புணர்ப்பாம் மொழியொணாக் கலப்புநிலையை எய்துவன். எய்தியவிடத்து ஆருயிர் சிவனடிக்கீழ் அடங்கும். அடங்கவே இருவரும் ஒருவராய் நிற்பர். இருவர் கலப்பும் தேனும் பாலும் கலந்த கலப்பினை மானும்: மானும் - ஒக்கும். (அ. சி.) கரு - பிறப்பு. இருவரும் - சீவனும் சிவனும். குருவரம் - குருவின் வரம். கூடிய - சமாதி கூடிய. (12) 2242. அணுவின் துரியத்தி லான நனவும் அணுவசை வின்கண் ணான கனவும் அணுவசை விற்பரா தீதஞ் சுழுத்தி பணியிற் பரதுரி யம்பர மாமே. (ப. இ.) ஆருயிராகிய அணுவின் பேருறக்கநிலையாம் துரியத்தில் உண்டாகும் நனவும், ஆருயிரின் புடைபெயர்ச்சியில் உண்டாகும் கனவும், அப் புடைபெயர்ச்சியின்கண் தன்னை இழப்பதாகிய உறக்கமும் பொருந்திய இடத்து அப்பால்நிலை எய்தும். எய்தவே சிவனுடன் ஒன்றாம் சிறப்பு எய்தும். இதுவே பரம் என ஓதப்பெற்றது. (அ. சி.) அணு - ஆன்மா. பணியில் - பொருந்தினால். (13) 2243. பரதுரி யத்து நனவும் பரந்து விரிசக முண்ட கனவுமெய்ச் சாந்தி உருவுறு கின்ற சுழுத்தியும் ஓவத் தெரியுஞ் சிவதுரி யத்தனு மாமே. (ப. இ.) மேற்பேருறக்கமாகிய பரதுரிய நனவு எங்கும் பரந்து விரிந்த உலக நுகர்வுகளை உண்டன. அதுபோல் கனவுப் பயனும் நுண்ணுகர்வுண்மையாதலின் பரதுரியக் கனவு மெய்ம்மை அமைதியாகும். கருவி கரண முதலிய உருவு மட்டும் அசைவின்றியிருக்கும் உறக்கநிலையும் நீங்க, ஆண்டு அருளாற்புலனாகும் ஒன்று. அதுவே சிவதுரிய நிலையாகும். அந்நிலை எய்தியவன் சிவதுரியத்தனாவன். (14) 2244. பரமா நனவின்பின் பாற்சக முண்ட திரமார் கனவுஞ் சிறந்த சுழுத்தி உரமாம் உபசாந்த முற்றல் துறவே தரனாஞ் சிவதுரி யத்தனு மாமே. (ப. இ.) மேல்நனவு என்று சொல்லப்படும் பரமா நனவின் அடுத்தநிலை மெய்ம்மையும் உறுதியுமுடைய மேற்கனவில் உலக நுகர்வுகளை உண்ணும். சிறந்த உறக்கநிலை நல்லுறுதியாகும். பேருறக்கமேனிலை அமைதி நிறைதல். அதன் மேல்நிலை துறவாகும். இந்நிலை சிவதுரிய நிலையாகும். இந்நிலை எய்தினான் சிவதுரியத்தனாவன். (அ. சி.) பரமா நனவு - பர நனவில். தரனாம் - கைகூடப் பெற்றவனாம். (15)
|