940
 

அத் தலைவனாகிய சிவபெருமானை அருச்சிப்பார்கள். அங்ஙனம் அருச்சிப்பதால் அச் சிவபெருமான் அவர்கள் நல்லுள்ளத்தில் வல்லே புக்கு உறைகின்றனன். தனி அறிவு - சிவபெருமானை அறியும் ஒப்பிலா அறிவு; சிவபெருமானால் தவப்பயனாகக் கொடுக்கப்படும் அறிவு.

(1)

2316. அங்கே யடற்பெருந் தேவரெல் லாந்தொழச்
சிங்கா சனத்தே சிவனிருந் தானென்று
சங்கார் வளையுஞ் சிலம்புஞ் சரேலெனப்
பொங்கார் குழலியும் போற்றிஎன் றாளன்றே.

(ப. இ.) ஆருயிர் உள்ளங்கள்தோறும் எழுந்தருளும் வள்ளற்பிரானாகிய சிவபெருமான் புறத்துத் திருவெள்ளிமலையில் வீற்றிருந்தருள்கின்றனன். அங்கு வலிமைமிக்க தேவர்களெல்லாம் சென்று திருவடி பணிந்து தொழுதனர். அரியணைமீது அரியயற்கும் அறிதற்கு அரியான் வீற்றிருந்தனன் என்று தொழுதனர். விட்டு நீங்காத் திருவருளம்மை சங்க வளையும், அரிமணிச் சிலம்பும், விளக்கமிக்க திருக்கூந்தலும் உடையவள். அவள் சிவபெருமான்பால் வணங்கும் தேவர்கட்கும் பிறர்க்கும் அருள்வாயாக என்று சிவன்பால் விண்ணப்பித்தருளினள். போற்றி - காத்தருள்வாயாக: இகரஈற்று வியங்கோள்.

(2)

2317. அறிவு வடிவென் றறியாத என்னை
அறிவு வடிவென் றருள்செய்தான் நந்தி
அறிவு வடிவென் றருளால் அறிந்தே
அறிவு வடிவென் றறிந்திருந் 1தேனே.

(ப. இ.) தொன்மை மலத்தாலும், பன்மை மருளாலும் ஆருயிர் தன்னைச் செறியும் அறிவு வடிவென்று அறியாதிருந்தது. சிவபெருமான் அவ்வுயிர்கள்மாட்டுப் பேரருள்பூண்டு அவ் வுயிர்களை விளித்து நீவிர் தொன்மைமலச் சார்பால் அறிவு விளங்காதிருந்தீர். பின் மாயைச் சார்பால் மருள்கொண்டு தெருளாதிருந்தீர். உண்மையான் நோக்கின் நீவிர் அறிவே வடிவமாகவுடையீர் என்று அறிவுறுத்தருள்வன். அந்த முறையில் அடியேனையும் யான் அறிவுவடிவென்று உணர்த்தியருளினன். அதற்குமுன் யானும் என்னை அறிவு வடிவென்று அறியாதிருந்தேன். அவனருளால் யான் அறிவுவடிவென்ற உணர்ந்தேன். உணர்ந்ததும், அங்ஙனம் உணர்த்திய சிவபெருமான் திருவடியுணர்வில் அவனருளால் கலந்து அதனையே அறிந்து என்றும் இறவா இன்புற்றிருந்தேன்.

(3)

2318. அறிவுக் கழிவில்லை யாக்கமும் இல்லை
அறிவுக் கறிவல்ல தாதாரம் இல்லை
அறிவே யறிவை யறிகின்ற தென்றிட்டு
அறைகின் றனமறை யீறுகள் 2தாமே.


1. ஐம்புல. சிவஞானபோதம், 8.

2. அருவுருவம். " 7. 3 - 1.

" எண்ணரிதாய். சிவப்பிரகாசம், பொது - 7.

" நானார். 8. திருக்கோத்தும்பி, 2.