945
 

(ப. இ.) முன்னை என்று ஓதப்படும் அனாதியின்கண் முதல் விளையாட்டாகிய பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்னும் நுண்ணுடம்புப் பிறப்பில் பிறந்தோர், பின்பு ஐம் மலமும் அகலும் நிலையில் செவ்வி வாய்ந்தோர் ஆவர். அவர் திருவருளால் தம்மைத் தெரிவர். தெரிந்த தமக்குரிய பண்டைத் தலைவனாம் சிவபெருமானின் தாளிணையைச் சார்ந்த ஆளினராவர். இவர்கள் என்றும் பொன்றாது நின்று சிவமாக மன்னி வாழ்வர். அதனால் மீண்டும் பிறப்பினுக்கு வாரார்.

(அ. சி.) முன்னை முதல் - அநாதி முதல். விளையாட்டத்து - பிறப்பினுள். மலம் வந்தவர் - மல பரிபாகம் வந்தவர். பேர்த்திட்டு - சமாதியால் மலத்தைக் கெடுத்து.

(14)


5. ஆறந்தம்(அறுமுடிவு)

2329. வேதத்தின் அந்தமும் மிக்கசித் தாந்தமும்
நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும்
ஓதத் தகுமெட் டியோகாந்த அந்தமும்
ஆதிக்க லாந்தமும் ஆறந்த மாகுமே.

(ப. இ.) அறுவகை ஈறும் ஒருவகை முடிபாம் பெறுமுடிபென்ப, அவற்றைக் கூறுங்கால் முறையே. 1. மறைமுடிபு, 2. முறைமுடிபு. 3. ஒலி முடிபு. 4. அறிவின் முடிபு, 5. செறிவின்முடிபு, 6. உணர்த்துவதன் முடிபு எனக் கூறுப. இவற்றை முறையே 'வேதத்தினந்த' முதலாக ஓதியருளினர். ஈண்டுக் குறிக்கப்படும் மறைமுடிபு செந்தமிழ் மறைபடிபே. மிக்கசித்தாந்தமென்பது தமிழாகமப் பிழிவாம் மெய்கண்ட அமிழ்தே. நாதாந்தம் முப்பத்தாறாம் மெய்யாம் ஓசைமுடிபே. போதாந்தம் நாதத்துணையாக அறியும் அறிவின் முடிபே. யோகாந்த மென்பது நிலைக்களத் திருவுருவச் சேர்க்கை முடிபே. கலாந்தமென்பது இவற்றைத் தொழிற்படுத்தும் திருவருள் ஆற்றலின் செயன் முடிபே என்க. கலா: கலை; ஐங்கலை. அவை நீக்கல் (2336) முதலைவகை ஆற்றல்.

(அ. சி.) வேதத்தின் அந்தம் - ஆகமம். சித்தாந்தம் - ஆகமசாரமாய்ச் சீவன் முத்தர்களால் இயற்றப்பட்ட முடிந்த முடிவான சித்தாந்த நூல்கள். ஆறந்தம் - (1) வேதாந்தம், (2) சித்தாந்தம், (3) நாதாந்தம், (4) போதாந்தம், (5) யோகாந்தம், (6) கலாந்தம்.

(1)

2330. அந்தமோ ராறும் அறிவார் அதிசுத்தர்
அந்தமோ ராறும் அறிவார் அமலத்தர்
அந்தமோ ராறும் அறியார் அவர்தமக்கு
அந்தமோ டாதி அறியவொண் ணாதன்றே.

(ப. இ.) மேலோதிய ஆறந்தங்களும் திருவருளால் அறிபவர் எல்லையில்லாத தூயராவர். அதுபோல் ஆறந்தமும் அறிவார் மலமற்றவராவர். இவற்றின் உண்மைகளைச் சிவகுரு வாயிலாக அறியாதவர் இறப்புப்