953
 

2349. அண்டங்கள் ஏழுங் கடந்தகன் றப்பாலும்
உண்டென்ற பேரொளிக் குள்ளாம் 1உளவொளி
பண்டுறு நின்ற பராசத்தி யென்னவே
கொண்டவ னன்றிநின் றான்எங்கள் கோவே.

(ப. இ.) எழுவகையாகக் கூறப்படும் அண்டங்கள் அனைத்தையும் கடந்து நீங்கி அப்பாலும் அருளால் நோக்கினால் அங்கு என்றும் நிலைப்பாக உண்டென்று சொல்லப்பெறும் அருள் ஒளியாகிய பேரொளி ஒன்று உண்டாம். அப் பேரொளிக்கும் உள்ளாக ஓர் அறிவுப் பேரொளியுண்டாம். அவ்வொளியே திருச்சிற்றம்பலமாகும். இத் திருச்சிற்றம்பலம் பண்டே பொருந்தியுள்ள பேரறிவுப் பெருந்திருவாகிய பராசத்தி எனப்படும். அப் பராசத்தியாகிய வனப்பாற்றலைத் திருமேனியாகக் கொண்டுள்ளவன் சிவபெருமான். அவன் எல்லாவற்றுடனும் கலப்புத் தன்மையால் விரவி நின்றான். எனினும் பொருள் தன்மையால் வேறுபட்டும் நின்றருள்கின்றனன். அத்தகைய விழுமிய முழுமுதற் சிவபெருமானே எங்கள் முதல்வன் ஆவன். கோ - முதல்வன்; வேந்தன். பரம்: மேல். இப்பரம் என்னும் தமிழ்ச் சொல் 'புரை' என்னும் உரிச்சொல்லடியினின்றும் தோன்றியது. 'உருவுட்காகும் புரை உயர்வாகும்.' (தொல். சொல் - 300.)

(அ. சி.) முளவொளி - சிற்றம்பலம். அன்றி நின்றான் - மற்றொன்றோடு சம்பந்தம் இல்லாது நின்றான்.

(21)

2350.கோவுணர்த் துஞ்சத்தி யாலே குறிவைத்துத்தேவுணர்த் துங்கரு மஞ்செய்தி செய்யவேபாவனைத் தும்படைத் தர்ச்சனை பாரிப்பஓவனைத் துண்டொழி யாத 2ஒருவனே.

(ப. இ.) சிவபெருமான் சிவகுருவாய் எழுந்தருளிவந்து திருவருளாலே அனைத்துண்மைகளையும் உணர்த்தியருள்வன். அவன் உணர்த்திய குறிவழிநின்று சிவவழிபாட்டுச் செய்தியைச் செய்தல்வேண்டும். அதன் பொருட்டுச் செந்தமிழ்த் திருமறை திருமுறை முதலியவற்றில் காணப்படும் மந்திரத் திருப்பாட்டுக்களை மனந்தூயராய் இனத்துடன் சேர்ந்து ஓதி எப்போதும் வழிபடுதல்வேண்டும். சிவபெருமான் தங்கும் கோயில் ஆருயிர்களின் கள்ளமிலா வெள்ளையுள்ளமே. திருக்கோயிலும் ஆங்குக் காணப்படும் குறிகளும் அடையாளமுமாகவுள்ள திருவுருவங்களும் பிறவும் அச் சிவபெருமான் அன்பர் உள்ளத்துக்கு எழுந்தருளி வரும் வாயில்களே. உள்ளம் சிவபெருமான் உற்றுறைஇல் கோயிலுரு, கொள்ள வருவழியாங்கூறு என்பதை நினைவுகூரின் மேலது விளங்கும். அங்ஙனம் வழிபாடு செய்யவே உண்டொழியாத எஞ்சுவினை யனைத்தும் ஒப்பில் ஒருவனாம் அச் சிவபெருமானால் நீங்கும்படி ஏற்படும். ஓவ: என்பது ஓ என நின்றது. ஓவ - நீங்க. ஒருவன் - ஒப்பில் சிவபெருமான்.


1. அண்டமாரிருள். அப்பர், 5. 97 - 2.

2. செந்தமிழர். சம்பந்தர், 3. 79 - 4.

" மற்றுநீ. 12. தடுத்தாட், 70.