(அ. சி.) கோ - ஆன்மா. சத்தி - திருவருட் சத்தி. தேவுணர்த்துங் கருமம் - சிவத்தை யறியும் செயல். பா - தோத்திரப் பாட்டு. பாரிப்ப - நிரம்பச் செய்ய. ஓவ - ஒழிய. (22) 2351. ஒருவனை யுன்னார் உயிர்தனை யுன்னார் இருவினை யுன்னார் இருமாயை யுன்னார் ஒருவனு மேயுள் ளுணர்த்திநின் றூட்டி அருவனு மாகிய ஆதரத் 1தானே. (ப. இ.) ஒப்பில் ஒருவனாம் சிவபெருமானை உள்ளன்புடன் நாடார். அவனை நாடாமையால் ஆருயிரின் உண்மையினையும் நாடார். இது மணத்தையறியும் வாயிலாகவே மறைந்துள்ள மலரை அறிதல்கூடும். மணத்தையே அறியாரெனின் மலரை எங்ஙனம் அறிவர்? அறியார் என்னும் ஒப்பினை இஃது ஒக்கும். இருள்சேர்முனைப்பாற் செய்யப்படும் நல்வினை தீவினை என்னும் இருவினையையும் நாடார். தூமாயை தூவாமாயை என்னும் இருமாயையினையும் நாடார். ஒருவனாகிய சிவபெருமான் ஒருவனுமே இவையனைத்தையும் உள்நின்று உணர்த்தியருளுகின்றனன். இருவினைப்பயனை ஊட்டியருள்கின்றனன். அவன் 'மாற்றம் மனம்கழிய நின்ற மறையோன்' ஆதலின் அருவன் என்றனர். அவனே யாவர்க்கும் யாவைக்கும் மேலாம் அளவிலாச் சீருடைய சிவனாவன். அச் சிவனே அனைத்தையும் தாங்கும் நிலைக்களனாவன். ஆதாரம் என்பது ஆதரம் எனக் குறுகி நின்றது. ஆதாரம் - நிலைக்களம். (அ. சி.) ஒருவன் - சிவன் vide "ஒன்றவன் தானே இரண்டு அவன் இன்னருள்" (மூலர்). இருமாயை - மாயை, மாமாயை. ஊட்டி - இருவினைகளைப் புசிப்பித்து. (23) 2352. அரனன்பர் தானம தாகிச் சிவத்து வருமவை சத்திகள் முன்னா வகுத்திட்டு உரனுறு சந்நிதி சேட்டிப்ப என்றுந் திரனுறு தோயாச் சிவாநந்தி 2யாமே. (ப. இ.) பேரொடுக்கப் பெருமானாகிய அரன் தன் அன்பர் தூயவுள்ளத்தையே கோயிலாகக்கொண்டு எழுந்தருளியுள்ளான். அச் சிவபெருமானிடமாகவிருந்து வெளிப்படும் ஆற்றல்கள் சத்திகள் என்று சொல்லப்படும். அவற்றை முதலாக வகுத்தருளினன். அத் திருவருள் ஆற்றல்கள் உள்நின்று உன்னும். அஃதாவது இவ்வாறு உலகம் உருவாகுக என நினைக்கும். அவ்வாறே அவையாகும். அக் குறிப்பே உரனுறு திருமுன் சேட்டிப்ப என்றருளினர். சேட்டித்தல் - தொழிற்படுதல். உரனுறுசந்நிதி - ஆற்றல் திருமுன். ஆருயிர்கள் திருவருளாற்றல்களில் நிலையுறுமாறு தோய்ந்து சிவஇன்பியாகும். தோயா - தோய்ந்து; செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். சிவானந்தி - சிவஇன்பி; திருவடி இன்பினைநுகர்வோன்.
1. அருவுருவம். சிவஞானபோதம், 7. 3 - 1. " மோகமிக. சிவப்பிரகாசம், பொது, 14. 2. ஏதுமொன்று. அப்பர், 5. 60 - 1.
|