2359. பரானந்தி மன்னுஞ் சிவானந்தம் எல்லாம் பரானந்த மேன்மூன்றும் பாழுறா னந்தம் விராமுத்தி ரானந்த மெய்ந்நட னானந்தம் பொராநின்ற வுள்ளமே பூரிப்பி யாமே. (ப. இ .) சிறப்புயிராகிய ஆவி பரானந்தி எனப்படும.் அஃதாவது நந்தியைப் பரவிநந்தியென நாட்டோர் நவில நடப்போர். அத்தகைய பரானந்தி அருளால் அடையும் சிவ இன்பங்களெல்லாம் வருமாறு: ஆருயிர் உறக்கம், அருள்நிலை உறக்கம், சிவநிலை உறக்கம் என மூன்றாம். மாயையால் வரும் இன்பம் முத்திரைகள் பலவற்றானும் முற்றும் பல்வகை இன்பம். மெய்ப்பொருட் கூத்தாம் ஐந்தொழிலமை நடன இன்பம். இவற்றைப் பொருந்திய உள்ளமே பூரிப்புடையதாகும். அதனால் அவ்வுள்ளம் பூரிப்பி என வழங்கப்படும். அதனால் பூரிப்பியாகும். பாழ் - மாயை. பூரிப்பு - பொலிவு. பூரிப்பி - பொலிவுடையது. (அ. சி.) பராநந்தி - சீவன் முத்தன். மூன்றும் - சிவசுழுத்தி. சீவசுழுத்தி பரசுழுத்தி. பாழுறானந்தம் - மாயையினாலாகிய இனபம். விரா - விரவிய, பொருந்திய. முத்திரானந்தம் - சாம்பவி முத்திரை முதலியவற்றின் பயிற்சியால் உண்டாகும் இன்பம். பொராநின்ற - அடைந்த. பூரிப்பு - இன்பம். (31) 2360. ஆகுங் கலாந்தம் இரண்டந்த நாதாந்தம் ஆகும் பொழுதிற் கலையைந்தா மாதலில் ஆகும் அரனேபஞ் சாந்தக னாமென்ன ஆகு மறையா கமமொழிந் தானன்றே. (ப. இ.) கலாந்தம் இரண்டாகும். அவ் விரண்டும் நாதாந்தம். கலையந்தம் என்ப. கலையந்தம் நீக்கலாகிய நிவிர்த்தி முதல் ஐந்தாகும். இவ் வைந்திற்கும் அரனே முழுமுதலாவன். அதனால் அரனே பஞ்சாந்தகனாமென்ன அருளினர். இங்ஙனம் மறையாகமம் முறையுற மொழிந்தனவென்க. (அ. சி.) பஞ்சாந்தகன் - தனித்தனியே ஐந்து கலைகளின் முடிவிடத்து இருப்பவன். (32) 2361. அன்றாகு மென்னாதை வகையந்தந் தன்னை ஒன்றான வேதாந்த சித்தாந்தம் உள்ளிட்டு நின்றா லியோகாந்த நேர்படு நேர்பட்டான் மன்றாடி பாத மருவலு மாகுமே.1 (ப. இ.) ஐவகையான முடிபாம் அந்தங்களும் மாறுபட்டதன்று. அன்றுதல் - மாறுபடுதல். இவ் வுண்மையினை வேதாந்த சித்தாந்தம் ஒன்றென விளங்கக் கூறும். அத்தகைய வேதாந்த சித்தாந்தத்தை முன்னிட்டு ஒழுகினால் யோகாந்த நேர்படும். அச் செறிவுநிலை ஏற்பட்டால் மன்றாடி பாதம் மருவலுமாம். மன்றம் ஐவகையாகும்:
1. குழைமறை. 12. தடுத்தாட், 48.
|