959
 

"மேலாம் சிவயநம மேவுமணி பொன்வெள்ளி
பாலாம்செம் போடுமண் பற்றல்போல் - மேலாம்
அவனாடல் செய்வனகம் ஆல்தில்லை கூடல்
தவநெல்லை குற்றாலந் தான்."

அகம்: ஆருயிர்களின் அகத்துச் 'சிவயநம' என்னும் ஐம்மறைக்களத்து அவ்வுயிர் உய்ய அம்பலவாணன் அருட்கூத்தியற்றுகின்றனன். அக் கூத்தின் நினைப்பே புறத்து ஆலங்காடு, தில்லை, கூடல், நெல்லை, குற்றாலம் என்னும் ஐந்திடங்களிலும் நடிப்பதாகும். ஆல் - ஆலங்காடு. நெல்லை திருநெல்வேலி. மன்றாடியாகிய சிவபெருமான் திருவடியை அருளால் தலைக்கூடி இன்புறுதலாகும். தலைக்கூடுதல் - பொருந்துதல்.

(அ. சி.) அன்றாகும் என்னாது ஐவ்வகை அந்தம் - வேறுபட்டது என்று கருதாது ஐந்து வகையான அந்தங்களை.

(33)

2362. அனாதி சீவனைம் மலமற்றப் பாலாய்
அனாதி யடக்கித் தனைக்கண் டரனாய்த்
தனாதி மலங்கெடத் தத்துவா தீதம்
வினாவுநீர் பாலாதல் வேதாந்த வுண்மையே.

(ப. இ.) தொன்மையே யுள்ள ஆருயிர்க்குத் திருவருளால் ஆணவம், கன்மம், மாயை, மாயை, யாக்கம், நடப்பாற்றல் ஆகிய ஐம்மலங்களும் அறும். அற்றவிடத்து அப்பால் நிலை எய்தும். அப்பால் நிலை - துரியாதீத நிலை. எய்தவே தொன்மை ஆணவப்பசை அடங்கும். அடங்கவே தன்னையும் அரனையும் தகுமுறையாற் காணும். காணவே தன்னை வந்து பொருந்தும்படி பொத்திய ஆதிமலமாகிய கன்மம் மாயைகளாகிய இடைச் சேர்மலம் எளிதின் நீங்கும். நீங்கவே அருஞ்சைவர் - தத்துவம் (2139) முப்பத்தாறுக்கும் அப்பாலாக ஆருயிர் நிற்கும். நீர் பாலுடன் கலந்து பாலின் சுவையும் நிறமும் பெற்று விளங்கும் என விளக்குவது வேதாந்த மெய்ம்மையாகும் பாலோடளாய நீர் பாலாகுமென்பது பயனுடைப் பார்மொழி. ஆருயிரும் மலம் நீங்கிச் சிவனார் எண் குணம் பெற்றுச் சிவனாய்த் திகழும்.

(அ. சி.) தனாதிமலம் - தன் ஆதிமலம் - மாயை. (அனாதி மலம் ஆணவம்)

(34)

2363. உயிரைப் பரனை யுயர்சிவன் தன்னை
அயர்வற் றறிதொந் தத்தசி யதனாற்
செயலற் றறிவாகி யுஞ்சென் றடங்கி
அயர்வற்ற வேதாந்த சித்தாந்த மாமே.

(ப. இ.) ஆருயிரைப் பரனாகிய திருவருளை எவர்க்கும் மேலாம் பரசிவனை மருளற்றுத் தெருளுற்றுத் திருவருளால் செறிந்து காண்பாயாக. நீ அதுவாகின்றாய் என்று கூறும் 'தொந்தத்தசிப்' பெருங் கிளவியால் உன் செயலற்று அறிவாகியிருப்பாயாக. அறிவாகியும் திருவடிக் கீழ் அடங்கி நிற்பாயாக. இந் நிலையே மருளற்ற வேதாந்த சித்தாந்த அருள் மாண்பாகும். இவ் வுண்மை வரும் செந்தமிழ் மறை முடிபாம் திருவாசகச் செழுந்தேனால் உணரலாம். அத் திருப்பாட்டு வருமாறு: