965
 

2374. பதியும் பசுவொடு பாசமும் மேலைக்
கதியும் பசுபாச நீக்கமுங் காட்டி
மதிதந்த வானந்த மாநந்தி காணுந்
துதிதந்து வைத்தனன் சுத்தசை வத்தே.

(ப. இ.) பேருயிராகிய பதியும், ஆருயிராகிய பசுவும், அப் பசுவினைப் பிணித்த பாசமும், அருளால் பாசம் நீங்கிய இடத்துப் பெறும் திருவடிப்பேறாகிய மேலைக்கதியும், சிவகுருவாய்ச் சிவபெருமான் எழுந்தருளி வந்து பசு பாசத்தை நீக்கியருளும் நீக்கமும் மெய்ம்மையாக் காட்டி யருள்வது தனிப்பெரும் சைவமாம் சுத்த சைவத் தென்க. இத்தகைய தத்துவஞானமாகிய மெய்யுணர்வைத் தந்தருளியவன் இயற்கை உண்மை அறிவு இன்பமா நந்தியாகிய சிவபெருமானாவன்; அவன் திருவடியிணையினைச் செந்தமிழ்த் திருமுறை வழியாக வழிபட்டு உய்யும்படியாகவும் வைத்தருளினன்.

(9)

2375. அறிந்தணு மூன்றுமே யாங்கணு மாகும்
அறிந்தணு மூன்றமே யாங்கணு மாக
அறிந்த அனாதி வியாத்தனு மாவன்
அறிந்த பதிபடைப் பானங் கவற்றையே.

(ப. இ.) யாங்கணும் அறியும் தன்மைவாய்ந்த அணுவாகிய ஆருயிர் மூவகைப்படும். அவை ஒருமலம் இருமலம் மும்மலம் என்னும் பிணிப்பால் ஆவன. அம் மூன்றுமே யாங்கணுமாக நீக்கமற நிற்கும் நிலைமையினை அறிந்த பெரும்பொருள் சிவபெருமானாவன். அவன் தொன்மையிலுள்ளவன். எங்கும் நிறைந்தவன். ஆருயிர்களின் பிணித் துன்பத்தினின்றும் விடுவிக்கத் துணிந்தனன், அவற்றிற்கு வேண்டிய உடல்கலன் உலகு உணா முதலியவற்றை மாயாகாரியமாகப் படைத்தளித்தருளினன். அவற்றை: அவற்றிற்கு - உருபு மயக்கம். ஒருபுடை யொப்பாக (2352) ஒரு மலத்தார் இடையின மெய்யையும், இருமலத்தார் மெல்லின மெய்யையும், மும்மலத்தார் வல்லின மெய்யையும் ஒத்தவரெனக் கூறலாம். வல்லினமெய் மொழிக்கிறுதியில் நில்லாமை மிக்க செருக்குடைய மும்மலக் கட்டினை யொக்கும். மெல்லினமெய் மொழிக்கிறுதியில் வருதலானும் மெல்லென்று ஒலித்தலானும் மாயை அடங்கிய இருமலக் கட்டினை யொக்கும். இடையினமெய் லகர ழகர ளகரங்கள் பயின்று குழைந்திருப்பதால் வினை மாயை அடங்கிய ஒரு மலக்கட்டினையொக்கும். ஆய்தம் திருவருளம்மை யொக்கும் ஐம்மலம் அகன்று செம்பொருட்டந்தையின் தாள்சேர் உயிர் குற்றுகரமாகும். அதுவே, "குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின், ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்" (தொல். எழுத்து, 67) என்னும் நூற்பாவின் கருத்தாகும். 'நுந்தை' என்னும் முறைப்பெயர் மெய்ம்முதலே ஆயினும் ஒற்றுமை நயத்தான் குற்றியலுகர முதலாயிற்று. அதுபோல் திருவடிப்பேறு பெற்ற அடிமையுயிரும் எண்குணமும் பதியப்பெற்று இரண்டறவிரவி நிற்பதால் முதலெனவுங் கூறப்படும். அக்குறிப்பு நுந்தை என்னும் பெயரில் தந்தை என்னும் பொருள் காணப்படுவதால் ஆருயிர்கள் அடிசேர் மகவெனக் கொள்க. இது 'மன்னவன்றன் மகன்' என்பதனாற் காண்க.

(10)