969
 

(ப. இ.) பாசத்துடன் பயின்றுவரும் ஆருயிர் முதல் பரமாகும். பரம் - சுவை. இயற்கையிலேயே சுமையுடையதாகுமென்ப. அப் பாசப்பிணிப்புச் சுமையுடைமையால் அவ்வுயிர் பசுவெனப்பட்டது. ஆருயிர் பாசம் பயின்று தூயனாதற்பொருட்டுப் பதியும் அப்பசுவுடன் கலத்தலால் பதியும் பசுவாகும் என்ப. இது நோயாளிக்கு மருந்து கூட்டிக்கொடுப்போன் அம்மருந்துடனும் நோயாளியுடனும் தொடர்பு கொண்டிருப்பதை யொக்கும். ஆருயிர்க்குப் பாசத்தினைப் பயிற்றுவித்தற்பொருட்டுப் பதியும் பரமாக விளங்கும். பரம் - முதன்மை.

(19)

2385. அத்தத்தில் உத்தரங் கேட்ட அருந்தவர்
அத்தத்தில் உத்தர மாகும் அருள்மேனி
அத்தத்தி னாலே யணையப் பிடித்தலும்
அத்தத்தில் தம்மை யடைந்துநின் றாரே.

(ப. இ.) அருந்தவர்கள் மறை முதலியவற்றைப் பயின்று பொருள் முடிபின்கண் மயங்கியிருந்தனர். அவர்கள் ஆலமர் கடவுளிடம் அருளால் வந்தனர். வந்து அத்தமாகிய பொருளின்கண் தெளிவாகிய அறிவு பெறுதற்பொருட்டு உத்தரம் வினவினர். அவ்வாலமர் செல்வன் சீர்மிகு சிறப்பினோன் ஆதலின் அத்தமாகிய கைவிரல்களினால் மாற்றமிலா மாறிலாப் பொருந்தும் விடை திருந்த அளித்தருளினன். மேலும் தன் அருள்மேனித் திருக்கையினால் தலையினைத் தொட்டுச் சிவதீக்கையும் செய்தருளினன். அங்ஙனம் தலையினைத் தொட்டபொழுதில் அவர்கள் தம்மை அவர்தம் திருவடிக்கு ஆளாக்கி அடைந்துநின்றனர். அத்தம் - பொழுது கைவிரல்களாற் காட்டும் உண்மை வருமாறு: பெருவிரல் பதியாகும். ஆட்காட்டி விரல் பசுவாகும். நடுவிரல் கன்மமாகும். அணி விரல் மாயையாகும். சிறுவிரல் ஆணவமாகும். பதியினைக் குறிக்கும் விரலுக்குப் பெருமைமிக்க விரல் என்று கூறதலும், ஆளாம் உயிரினைக் குறிக்கும் விரலுக்கு ஆட்காட்டி விரலெனக் கூறுதலும் சாலப் பொருந்தும் இயற்கையவாதல் காண்க. இருவினையைக் குறிக்கும் விரலை நீண்ட நடுவெனலும் மாயையைக் குறிப்பதை அணியெனலும் ஆணவத்தைக் குறிப்பதைச் சிறுமை எனலும் அங்ஙனமே பொருத்தமாதலறிக. பெருவிரல்நின்ற நிலையிலேயே நிற்பின் ஏனைய விரல்களுக்கு எவ்வகைச் செயல்களும் யாண்டும் எளிதின் நிகழ்வனவாகா. அஃது 'அவனசையாமல் அணுவசையா' தென்பதனை உணர்த்தும். எனவே ஆருயிரும் பேருயிரும் ஒன்றாய்ப் புணர்ப்பதற்கு இரண்டன்காதல் இணக்கமும் இன்றியமையாதென்க.இவற்றை வரும் வெண்பாவால் நினைவுகூர்க:

"முன்னோன் பெருவிரலாம் மூவா உயிர்சுட்டாம்
பின்மூன்றும் நீள்வினையே மாயைமலம் - உன்னுங்கால்
ஆளும் பெருவிரலும் ஆட்காட்டி யும்புணர்ப்பக்
கேளுறுமால் ஒட்டாவம் மூன்று.

(அ. சி.) அத்தத்தில் - சின்முத்திரையினால், உத்தரம் கேட்ட - தம் கேள்விகளுக்கு விடைகேட்ட, அருந்தவர் - தவசிகள், பிடித்தல் - தொட்டுத் தீக்கை செய்தல்.

(20)