(ப. இ.) தற்பதமாகிய சிவனென்றும், தொம்பதமாகிய ஆருயிர் என்றும் தனித்தனியாக நிற்பது அசிபதம் சேராத இடத்து. அசிபதம் சேர்தல் என்பது: ஆருயிர் சிவத்தைச் சார்ந்து மாறின்றிச் சிவமாகும் நிலை. அஃது ஆகிறாய் என்பதாம். ஆகிறாய் என்பது அருளால் ஆக்கப்படுகிறாய் என்பதாகும். அந்நிலையில் திருவருள் வீழ்ச்சியாகிய சத்தினிபாதம் வந்து பொருந்தும். இதனை 'நேரிழையாள் பதம்' என ஓதியருளினர். இத் திருவருள் வீழ்ச்சியினால் சொல்லாலும் நிலையாலும் தொடரவொண்ணாத முழுமுதற் சிவபெருமான் வேறுபாடின்றிக் கலந்து-நின்றருளினன். கற்பனை - வேறுபாடு. (அ. சி.) அசியத்துள் - அதிபத நிலையில், நேரிழையாள் பதம் - சத்திநிபாதம், கற்பனை - விகற்பங்கள், கலந்து - சீவசிவ பேதமின்றி. (3) 2401. அணுவும் பரமும் அசிபதத் தேய்ந்து கணுவொன் றிலாத சிவமுங் கலந்தால் இணையறு பால்தேன் அமுதென இன்பத் துணையது வாயுரை யற்றிடத் 1தோன்றுமே. (ப. இ.) ஆருயிராகிய அணுவும், அவ் வுயிரினைச் சிவத்துடன் கூட்டுவதாகிய பரமாகிய திருவருளும் அசிபதமாகிய ஆக்கப்பாட்டால் பொருந்தி யாண்டும் எவ்வகைத் தடையுமின்றி இலங்கும் சிவபெருமான் கலந்தருளினால் ஒப்பில்லாது உயர்ந்து விளங்கும் பால் தேன் அமுது ஆகிய இவை கலந்த கலவை யொத்து இனிக்கும். அவ் வினிப்பு யாண்டும் தெவிட்டாது விளங்கும். இவ் வின்பப்பகுதி சொல்லிறந்த தொன்றாய்த் தோன்றும். பால் தேன் அமுது எனும் மூன்றும் முறையே ஆருயிர் பேருயிர் சீரருள் என்னும் மூன்றன் ஒருபுடை ஒப்பாகக் கூறலாம். ஆருயிர் - பசு. பேருயிர் - பதி. (அ. சி.) அணு - ஆன்மா, பரம் - பரான்மா, பரை ஆகிய அருளுடன் கூடிய ஆன்மா, ஏய்ந்து - கூடி, கணு - தடை, இன்பத்துணை - இன்பத்தின் பகுதி. (4) 2402. தொம்பதந் தற்பதந் தோன்றும் அசிபதம் நம்பிய சீவன் பரன்சிவ னாய்நிற்கும் அம்பத மேலைச் சொரூபமா வாக்கியஞ் செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானன்றே. (ப. இ.) தொம்பதம் திருவருளை நம்பி வாழும் வாழ்க்கையினையுடைய ஆருயிராகும். தற்பதம் ஆருயிரைச் சிவத்துடன் கூட்டும் திருவருளாகும். ஆருயிரும் பேருயிரும் ஒன்றாய்க் கலந்து தோன்றும் நிலை சிவனாகும். இந்நிலையினைச் சிறப்புநிலை எனக் கூறுவர். சிறப்பு நிலையெனினும் சொரூப நிலையெனினும் ஒன்றே. அந் நிலையினையுணர்த்தும் அச் சொல்லும் சிறப்புப் பெரும் பொருட்கிளவியாகும். பெரும் பொருட்கிளவி - மாவாக்கியம். ஆருயிர் செம்பொருளாகிய சிவனை அடைதற்பொருட்டுச் சீர்த்தி மிக்க நந்திக் கடவுள் ஆண்டருளுகின்றனன்.
1. இரும்பைக்காந். சிவஞானசித்தியார், 11. 2 - 5.
|