43
 

(ப. இ.) வழிப்பேறும் விழுப்பேறுமாகிய இருதிறமுத்தியும், இம்மை மறுமையாகிய இருபெரும் செல்வங்களும் ஒருவர் உள்ளன்புடன் கள்ளமின்றி விரும்புவாரானால், எள்ளலிலாது மறந்தும் அறநெறியையே புரிதல் வேண்டும். மறந்தும் புரிதல் என்பது பயிற்சி மேலீட்டால் பொறிகள் மனத் தொடர்பின்றியே நனவு கனவுகளில் முனமுறச் செய்வன. இவ்வுண்மை, "நற்றவாவுனை நான்மறக்கினும் சொல்லுநா நமச்சிவாயே" என்னும் திருமறையான் உணரலாம். சிறந்த கடலால் சூழப்பட்ட உலகோர் செய்தொழில் எல்லாவற்றினும் வரும் வருவாயில் ஆறில் ஒன்று வேந்தனுக்குரிய முறையான இறைப் பொருளாகும். ஏனைய ஐந்து கூறும் 'தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தானென்றாங்கு, ஐம்புலத்தாறு ஓம்பல் தலை' என்பதனாற் பெறப்படும் ஐவர்க்குமாம். தென்புலத்தார் - தெய்வத்தை நிலை நாட்டிச் சென்ற அழகிய திருவடியுணர்வுடைய நாயன்மார். விருந்து - தெய்வ நாட்டத்தை நிலைநாட்டி வருகின்ற நாயன்மார்.

(7)

102. வேந்தன் உலகை மிகநன்று காப்பது
வாய்ந்த மனிதர்கள் அவ்வழி யாநிற்பர்
பேர்ந்திவ் வுலகைப் பிறர்கொள்ளத் தாங்கொள்ளப்
பாய்ந்த புலியன்ன பாவகத் தானே.

(ப. இ.) வேந்தன் உலகை நலமுறக் காப்பது மிகச் சிறந்த சிவபுண்ணியமாகும். நன்னெறி வாய்ந்த உலகமாந்தர் அரசன் எவ்வழி அவ்வழி நடவாநிற்பர். என்னை? குடிகள் அன்புடையராய், வேந்தன் அருளுடையனாய் இணங்கி வாழும் குணத்தான் என்க. மாறுபட்டுத் தன்னடிக் கீழுள்ள உலகைப் பிறர்கொள்ள வந்தபொழுது காவாதவனும், தன் மாணாவுவகையான் செருக்குற்றுப் பகைவனினும் மிக்க கேட்டை யுண்டாக்குபவனும் காட்டில் வாழும் கொடுவிலங்காகிய பதுங்கிப் பாய்ந்து கொல்லும் புலியினும் மிகக் கொடியவனாவன். பாவகத்தான் - பாவமே எண்ணும் தீயவுள்ளத்தான்; கொடியன் என்று எல்லாரும் எண்ணி அஞ்சும் நினைப்பிற்கு உரியன். பாவகம் - நினைப்பு.

(8)

103. கால்கொண்டு கட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப்
பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர்
மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே.

(ப. இ.) உயிர்ப்பினை அகத்தவப் பயிற்சியான் உள்ளடக்கி மூலத் தீயினை நடுநாடி வழியாக மேலேற்றித் திங்கள் மண்டிலத்துக் காணப்படும் பால்போலும் தூய வெள்ளிய நிலவுப் பயனாம் அமிழ்தினை அத்திங்கள் வாயிலாக நாளும் உண்ணுமவர் உலகியல் தேறலாம் மெய்யறியாமையினைத் தரும் கள்ளினை யுண்ணார். இம்முறையில் அமிழ்துண்ணும் செம்மையிலாதார், அறிவழிவினைச் செய்யும் புறக்கள்ளினை மருள் கொண்டு உண்பர். அதனால் அவர்கள் தமக்கும் உலகுக்கும் பெருந் தீங்கை உண்டு பண்ணுவர். அத்தகையோரைத் தக்கவாறு தண்டஞ் செய்து நன்னெறிப் படுத்துதல் வேந்தன் கடமையாகும். செய் - செய்தல் : முதனிலைத் தொழிற்பெயர்.