547
 

1407. பூரணந் தன்னிலே வைத்தற்ற வப்போதம்
ஆரண மந்த மதித்தானந் தத்தோடு
நேரென ஈராறு நீதி நெடும்போகங்
காரண மாஞ்சுத்த சைவர்க்குக் காட்சியே.

(ப. இ.) ஆருயிர், நிறைவாம் சிவத்துள் அடங்குதலாகிய முற்றுணர்வு எய்துதலும் பண்டைத் தன்முனைப்பாகிய சிற்றுணர்வு அறும். அதுவே மறைமுடிவாம். பேரின்பத்துடன் கலந்து, பன்னிரண்டாம் நிலையில் பெறப்படும் சிவ நுகர்வு முறையாக எய்தும். இவையனைத்தும் சுத்த சைவர்க்குக் காட்சியாம். மதித்தல் - மத்தித்தல்: கலத்தல். மத்தித்தல் என்பது மதித்தலென ஆயது இடைக்குறை.

(அ. சி.) அற்ற அப்போதம் - ஒழிந்த அந்த ஆன்மபோதம். ஆரணம் அந்தம் - வேதாந்தம். மதித்த - கலந்த. ஈராறு நீதி - 12 ஆதாரங்களின் முடிவு.

(6)

1408. மாறாத ஞான மதிப்பற மாயோகந்
தேறாத சிந்தையைத் தேற்றிச் சிவமாக்கிப்
பேறான பாவனை பேணி நெறிநிற்றல்
கூறாகு ஞானி சரிதை குறிக்கிலே.

(ப. இ.) மெய்கண்டார் எல்லையற்ற என்றும் ஒரு படித்தாயிருக்கிற திருவடியுணர்வு கைகூடுதலால் பிறப்புக்கு வித்தாம் பெரிய யோகங்களைப் பொருளாகத் தெளியவொட்டாது உள்ளத்தைத் தெளிவித்துச் சிவனிலையமாக்குவர். முழுதுணர்பேறான சிவனையே நாடுதலாகிய பாவனைபேணி அந்நெறியில் உறைத்துநிற்றல் அறிவிற்சீலம் என்ப்படும் ஞானத்திற் சரியையாகும்.

(அ. சி.) மதிப்பு - எல்லை. பாவனை - சிவோகம் பாவனை. கூறாகு ஞானி சரியை - ஞானத்தில் சரியை.

(7)

1409. வேதாந்தங் கண்டோர் பிரமமித் தியாதரர்
நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற யோகிகள்
வேதாந்த மில்லாத சித்தாந்தங் கண்டுளோர்
சாதா ரணமன்ன சைவர் உபாயமே.

(ப. இ.) உலகியல் ஒழுக்கங்கூறும் மறைமுடிபு கண்டோர் பெரும் பொருளுணர்வு கைவரப் பெற்றோராவர். அருஞ்சைவர் தத்துவம் முப்பத்தாறன் முடிவினைக் கண்டோர் பிறவித் தடுமாற்றமில்லாத சிவ யோகியராவர். உலகியல் கடந்த உணர்வு நிலையாகிய சித்தாந்தத்தினைக் கண்டோர் பொதுச்சைவர்தம் வழிவகை யுணர்ந்தோராவர்.

(அ. சி.) வித்தியாதரர் - அறிந்தவர்.

(8)