(ப. இ.) திருவருள் துணையில்லாமல் மருளும் உணர்வுடையீர் சொல்லுங்கள்; முழுமுதற் சிவன் பிறந்தார், உண்டுறைந்தார், இறந்தார் என்று வேதாகம அளவையால் நாட்டமுடியுமா? முடியும் என்பார்க்குத் தக்க விடை, முடியாதென்பதேயாகும்; சிவபெருமான் நஞ்சுண்டும் இறவாது சிறந்தனன். அதே அளவையான் ஏனைத் தெய்வங்கள் பிறந்திருந்துழன்று இறந்தொழியவில்லை யென்றுஞ் சொல்ல முடியுமா? முடியாதென்பதாகும். அத் தெய்வங்கள் அமுதுண்டும் இறந்தொழிந்தன. அதனால் அத் தெய்வங்களை உயிரினமென்று ஒதுக்காது மெய்ப்பொருள் என்று கொள்ளும் பிழைபாட்டுக் கொள்கையினின்றும் நீங்குங்கள். இவ்வுடல் இறந்துபட்டுப் பருந்துகளால் உண்ணப்படும் தன்மையது. இவ்வுடலை விட்டு ஆருயிர் நீங்கும் தன்மையது. அங்ஙனம் நீங்கிய வுயிர் அருளால் தெருளுடையதாயின் மெய்ப்பொருளாம் சிவனடியினை எய்தும். இதுவே திருவருட்டெளிவினைப் பெறுவதென்று துணிந்து சொல்லுங்கள். (அ. சி.) கூறு. . . . . .தமை - சிவன் பிறந்து இறந்ததைப்பற்றி உங்களால் சொல்லமுடியுமா? முடியாது. வேறு.....மின் - ஆதலின், பிறந்து இறக்கும் வேறு தெய்வங்கள் மெய்ப்பொருள் என்று கொள்வதை ஒழியுங்கள். பாறு - பருந்து. (9)
11. சிவபூசை 1792. உள்ளம் பெருங்கோயில் 1ஊனுடம் பாலயம் வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கங் கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே. (ப. இ.) ஆருயிரின் உள்ளமாகிய நெஞ்சமே திருக்கோயிலின்கண் காணப்படும் பெருமை மிக்க கருவறையினை ஒக்கும். இக் கருவறையின்கண் வீற்றிருப்பது சிவக்கொழுந்து. ஊனாலாகிய உடம்பு முற்றும் திருக்கோவிலாகும். பேரருளால் எல்லாம் புரியும் சிவபெருமானாகிய பெருவள்ளற்கு வாய்மை ஐந்தெழுத்து வழுத்துவதாகிய வாய் கோபுர வாயிலாகும். திருவருளால் மெய்ப்பொருளுண்மையினைச் செவ்வையாகத் தெளிந்தார்க்கு அவ் வுயிரே சிவக்கொழுந்தாகும். கள்ளவழி இழுக்கும் மெய் வாய் முதலிய ஐந்து புலன்களும் களையாகிய அழகுமிக்க மணி விளக்கே. களை - அழகு; அது களா என்று ஆகிப் பின் காளா என்றாயிற்று. (அ. சி.) காளாமணி - அழகிய மணி; அஃதாவது மாணிக்கம். (1) 1793. வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக் காட்டவும் நாமிலங் காலையும் மாலையும் ஊட்டவி யாவன வுள்ளங் குளிர்விக்கும் பாட்டவி காட்டுதும் பாலவி 2யாமே.
1. காயமே. அப்பர், 4. 76 - 4. " அஞ்செழுத்தா. சிவஞானபோதம், 9. 3 - 1. 2. ஆதி மாமறை. 12. சம்பந்தர், 429.
|