952
 

பேருணர்வின் முத்திரை மோனமாகிய மேன்மைத் திருவடி ஞானத்துள் மூழ்குதலாகும்.

(அ. சி.) மூதாந்தம் - பழைமையான அந்தம்.

(18)

2347. வேதாந்தந் தன்னில் உபாதிமே லேழ்விட
நாதாந்த பாசம் விடுநல்ல தொம்பதம்
மீதாந்த காரணோ பாதியேழ் மெய்ப்பரன்
போதாந்த தற்பதம் போமசி என்பவே.

(ப. இ.) வேதாந்த நிலைக்கண் உயிர் நுகர்வு நிலை ஏழு. இவ்வேழும் விட்டகல் நாதாந்தமாகிய ஓசைப் பிணிப்பின்கண்ணுள்ள பற்றறும் நன்மை பயப்பதாகிய தொம்பதமாகும். தொம்பதமென்பது ஆருயிரைக் குறிக்கும் நீ என்பதாகும். உபாதி நுகர்வுநிலை. மீதாந்தமாகிய அப்பால் முடிவு காரணோபாதியாகிய இறைநுகர்வுநிலை ஏழாகும். மெய்ப் பொருளாம் சிவன் அறிவின் முடிவாம் தற்பதமாகும். தன் - தலைவன்; இறை. ஆருயிரும் இறையும் ஒன்று கூடும்நிலை அசி என்பதாகும். அசி - ஆகிறாய்.

(அ. சி.) உபாதி ஏழ் - சீவ உபாதி ஏழ். காரணோபாதி ஏழ் ஈசுர உபாதி ஏழ். அசி - சிவ சீவர் ஒன்றாம்நிலை.

(19)

2348. வேதாந்த ஞானம் விளங்க விதியிலோர்
நாதாந்த போதம் நணுகிய போக்கது
போதாந்த மாம்பரன் பாற்புகப் புக்கதால்
நாதாந்த முத்தியுஞ் சித்தியும் நண்ணுமே.

(ப. இ.) செந்தமிழ்த் திருநான்மறையினைத் திருவருள் நினைவுடன் கற்று அவற்றால் எய்தும் திருவடியுணர்வு கைவரப்பெறாத சில்லோர் பெயர் மாத்திரையானே வடமொழி வேதத்தையும் வேதமெனத் தப்பாகக்கொண்டு அழிந்துபட்டுப்போகும். வேள்வி முதலாயினவற்றையே புரிந்து அவஞ்செய்கின்றனர். இதனையே மெய்கண்ட நாயனார் 'பசித்துண்டு பின்னும் பசிப்பானையொக்கும்' என்னும் திருவெண்பாவால் அவ்வேத வேள்வி தாழ்வானவை மட்டுமன்றிப் பயனும் நிலையில்லன; துன்ப விளைவின என்றும் அருளினர். பின்பு நாதத்தையே தெய்வமாகக் கொள்வோர் நாதாந்தபோதம் எய்துவர். அவர்கள் வழிப்பேறாகிய பதமுத்தி எய்துவர். அறிவார்கள் அனைவர்க்கும் அறிவை விளக்கும் சிவபெருமான் எல்லையில்லாத பேரறிவினன். அவ்வறிவினைத் திருவருள் துணையால் வணங்குவர். வணங்கவே சிவபெருமான் பக்கத்துச் செறியும் சீர்மை எய்துவர். இவர்கட்கு நாதாந்த முத்தியும் சித்தியும் எளிதின் எய்தும். நண்ணும் - எய்தும்.

(அ. சி.) வேதாந்த ஞானம் விளங்க விதியிலோர் - உண்மை வேதாந்த ஞானம் அடைய ஊழ் இன்றி, வடமொழி வேதங்களை ஓதியாகாதிகளை இயற்றுவோர். நாதாந்த போதம் - நாத தத்துவத்தை உணரும் ஞானம் நாதாந்த முத்தி - நாத தத்துவத்திலுள்ள பதமுத்தி. சித்தி - எண் சித்தி.

(20)