ஆருயிர் என்றும் மீளா அடிமையாய்ப் பொன்றாப் பேரின்பம் புசிக்கும் என்னும் பொய்யில் வாய்மை வரும் வெண்பாவால் உணர்க: "நெட்டுயிரெல் லாம்காவல் நேர்காதல் குற்றுயிராம் கட்டுமலம் மும்மைமெய் கண்ணுதலோன் - மட்டில் அகரவுயிர் ஆய்தமும் அம்மைஅடி இன்பம் நுகர்வுயிரும் குற்றுகரம் நோக்கு." காவல்: ஆண்மை, காதல்: பெண்மை. மும்மைமெய்: வல்லெழுத்து மெல்லெழுத்து இடையெழுத்து. அம்மை: நடப்பாற்றல்; ஆதிசத்தி. குற்றுகரம்: குற்றியலுகரம். இது 'நுந்தை' என்பதன்கண் முதலாம். 'குற்றியலுகரம்' - தொல். எழுத்து - 67. நோக்குக. (24) 2353. வேதாந்த தொம்பத மேவும் பசுவென்ப நாதாந்த பாசம் விடநின்ற நன்பதி போதாந்த தற்பதம் போயிரண் டயிக்கியஞ் சாதா ரணஞ்சிவ சாயுச்சிய மாமே. (ப. இ.) வேதாந்த வாயிலாக முப்பொருளுண்மை நாட்டல் 'தத்துவமசி' என்னும் மறையினால் ஆம். இவை தத், துவம், அசி எனப் பிரிந்து மூன்று சொற்களாக விளங்கும். இம் மூன்றனுள் தொம்பதம் நீ எனப் பொருள் பயந்து முன்னிலைச் சுட்டாய் ஆருயிர்களைக் குறிக்கும். அதனால் 'தொம்பதம் மேவும் பசுவென்ப' என்றருளினர். நாதமுடிவாகிய பாசம் ஆருயிர்களைப் பற்றிநிற்கும். அப் பாசம் அகல நிலைபெற்ற பதி, அறிவின் முடிநிலையாய் இயற்கைப் பேரறிவாய்த் திகழும் தற்பதமாகும். தத்-அது. அஃது என்ற சேய்மைச் சுட்டாகும். சேய்மைச் சுட்டென்பது சுட்டொணாப் பொருளை உளதென்னும் உண்மைக்கு ஊறின்றி உரைக்கும் கட்டுரை. எனவே, அஃது என்பது பதியாகிய சிவபெருமானாகும். ஆருயிரும், பேருயிராகிய பதியும் இரண்டறக் கூடும் கூட்டத்தைக் குறிப்பதாகும். அசி. அசி: ஆகிறாய். இரண்டன் கூட்டமும் அயிக்கியமாகும். ஆருயிர் பேருயிராகிய சிவமாகின்றது என்றமையால் முன் ஆகாமைக்குக்குக் காரணம் மலம் என்பது ஆகும். அம் மலத்தைப் போக்கியது திருவருளாகும். அத் திருவருள் கற்பிப்பார் போன்று ஆருயிரைக்கொண்டே மலத்தை அகற்றுவிக்கும். எனவே முப்பொருள் உண்மையும் அப்பொருள் கூட்டமும் திட்பமுறப் பெறப்படும் என்றும் மாறா இயல்பிற்றாய் இலங்கும் சிவ ஒன்றிப்பு ஆகும். சாதாரணம் - இயல்பு. சிவ ஒன்றிப்பு- சிவசாயுச்சியம். (அ. சி.) தொம்பதம் - வேதாந்தத்திலே தத்துவமசி என்ற தொடரைத் தத்பதம். துவம்பதம், அசிபதம் எனப் பிரித்துக் கூறுகிற வழக்கத்தினால் ஈண்டுத் துவம்பதம் என்றார். (25) 2354. சிவமாதல் வேதாந்த சித்தாந்த மாகும் அவமவ மாகு மவ்வவ் விரண்டுஞ் சிவமாஞ் சதாசிவன் செய்தொன்றா னானால் நவமான வேதாந்த ஞானசித் 1தாந்தமே.
1. புறச்சமயத். சிவப்பிரகாசம், (நுதலியபொருள்) பொது, 7.
|