2357. தத்துவ மாகுஞ் சகள வகளங்கள் தத்துவ மாம்விந்து நாதஞ் சதாசிவந் தத்துவ மாகுஞ் சீவன்றன் தற்பரந் தத்துவ மாஞ்சிவ சாயுச் சியமாமே. (ப. இ.) சிவபெருமானின் திருவடிமெய்ம்மையுணர்வையும் நினைவையும் எழுப்பும் திருவுரு சிவமேயாகும். எழுத்தின் வரிவடிவம் ஒலி வடிவத்தினையும் ஒலி வடிவம் பொருளினையும் உணர்த்தும் மெய்ம்மை இதற்கொப்பாகும். அதனால் தத்துவமாகும் சகளமென்றனர். சகளம் - திருவுரு அகளம் - திருவுரு இன்மை. படித்த பாடம் அருவாய் மனத்துத் தோன்றுவது இதற்கு ஒப்பாகும். அதுபோல் ஒளி ஒலி அருளோன் முதலிய நிலைகளும் தத்துவமாகும். ஆருயிரும் பேருயிருமாகிய ஆவியும் சிவனும் தத்துவமாகும். சிவத்துடன் ஆருயிர் ஒன்றிப்பது சிவசாயுச்சியமாகும். (அ. சி.) சகளம் - உருவம். அகளம் - அருவம். தற்பரம் - சிவம். (29) 2358. வேதமோ டாகமம் மெய்யாம் இறைவன்நூல் ஓதும் பொதுவுஞ் சிறப்புமென் றுள்ளன நாதன் உரையவை நாடில் இரண்டந்தம் பேதம தென்பர் பெரியோர்க் கபேதமே.1 (ப. இ.) வேதம் ஆகமம் என்னும் இரண்டும் உண்மையாம் இறைவனை உண்மையாகவுணர்த்தும் வண்மைப் பெருநூல். அந்நூல் இறைவன் உள்நின்றுணர்த்தத் திருவருள் கைவந்த மெய்யடியார்கள் வாயினால் உரைத்தருளப்பட்ட உரைசேர் நூலாகும். இவ் வுண்மை 'எனதுரை தனதுரையாக' என அருளிய ஆளுடைய பிள்ளையார் திருப்பாட்டான் உணரலாம். 'தனதுரை' என்பதற்குச் சிவபெருமானின் திருவடிச் சிறப்பினையே புகழும் உரையாக என்றலும் ஒன்று. அவ் விரண்டும் முறையே திருநெறியினை விளக்கும் பொதுநூலும் சிறப்பு நூலுமாகும். பொதுநூல் என்பது அன்பியலை மிகுதியாகவும் அருளியலைத் தொகுதியாகவும் கூறுவதாகும். சிறப்புநூல் என்பது அருளியலை மிகுதியாகவும் அன்பியலைத் தொகுதியாகவும் கூறுவதாகும். அன்பியல் - உலகியல். அருளியல் - வீட்டியல். இவ்விரு பெரு நூற்களும் இறைவனால் எழுப்பப்பட்டு, மெய்யடியாரால் எழுதப்பட்டு, வழுத்துரையாக வழங்கப்பட்டுத் திருவருளால் நின்று நிலவலின் அவை நாதனாகிய சிவபெருமானின் நற்றாள் சேர நவிலும் நல்லுரையாகும். நாதன் உரையாகிய இவ் விரண்டினையும் அருளால் நாடின் இரண்டினுடைய பொருள் முடிபும் திருவடிசேர் ஒருமுடிபே யாம். அவ் வுண்மையுணராது தம் மனம்போல் உரைக்கும் ஒருசிலர் வெவ்வேறு முடிபு என்பர். உண்மை யுணர்வண்மைப் பெரியோர்க்கு அவ் விரண்டும் ஒரு முடிபேயாம். பெரியோர்: கண்ணுதலோன் கழலிணையைக் கற்றல்கேட்டல் கருதல் கைக்கொள்ளல் கலத்தல் உடையார். பேதம் - வேறு. அபேதம் - வேறன்மை. (அ. சி.) வேதம் - தமிழ் நான்மறை. ஆகமம் - தமிழ் ஆகமங்கள். இரண்டந்தம் - வேதாந்தம், சித்தாந்தம், அபேதம் - வேற்றுமை இன்மை. (30) 1. ஓதுசம. சிவஞானசித்தியார், 8. 2 - 3.
|