323
 

749. காணலு மாகும் பிரமன் அரியென்று
காணலு மாகுங் கறைக்கண்டன் ஈசனைக்
காணலு மாகுஞ் சதாசிவ சத்தியுங்
காணலு மாகுங் கலந்துடன் வைத்ததே.

(ப. இ.) சிவபெருமானைப், படைப்போனாகவும், காப்போனாகவும், துடைப்போன் மறைப்போன் அருள்வோனாகவும் காணுதல் ஆகும். இத் திருவுருவங்கள் திருவருளாற்றலுடனும் ஆவியுடனும் சிவபெருமான் உடங்கியைந்து தோற்றியனவாகும். கறைக்கண்டன் - துடைப்போன். ஈசன் - மறைப்போன். சதாசிவம் - அருளோன். சத்தி - திருவருளாற்றல்.

(30)


15. ஆயுள் பரிட்சை

750. வைத்தகை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில்
உத்தம மிக்கிடில் ஓராறு திங்களாம்
அத்த மிகுத்திட் டிரட்டிய தாயிடில்
நித்தல் உயிர்க்கொரு திங்களில் ஒசையே.

(ப. இ.) உயிர்ப்போசையானது உச்சிக்கு நேரே அளவாய்த் தோன்றிடில் முதன்மை நிலையாகும். அளவின் மிகுமானால் ஆறு திங்களில் அகவை முடிவெய்தும். அதுவும் இரண்டுமடங்காயின் ஒரு திங்களில் அகவை முடிவெய்தும் என்க.

(அ. சி.) அத்தம் -கை.

(1)

751. ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண்
ஓசை யிறந்தவர் ஈசனை உள்குவர்
ஓசை யிறந்தவர் நெஞ்சினுள் ஈசனும்
ஓசை யுணர்ந்த வுணர்விது வாமே.

(ப. இ.) அறிவுருவாகிய சிவபெருமான் உயிர்ப்பின்கண்ணும் திருவுருவின்கண்ணும் ஒப்ப விளங்குவர். உயிர்ப்பை அடக்கியவர் இறைவனை எண்ணுவர். அங்ஙனம் உயிர்ப்படக்கியவர் நெஞ்சினுள் இறைவனும் ஆவியறிவுடன் ஒன்றித்து மேம்பட்டு விளங்குவன். ஓசை - உயிர்ப்பு. இறந்தவர் - உயிர்ப்பை அடக்கியவர்.

(அ. சி.) ஓசை இறந்தவர் - மனம் அடங்கப்பெற்றவர்.

(2)

752. ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடில்
நாமே லுறைகின்ற நன்மை யளித்திடும்
பூமேல் உறைகின்ற போதகம் வந்திடும்
தாமே யுலகில் தலைவனு மாமே.