1034 .கொம்பனை யாளைக் குவிமுலை மங்கையை வம்பவிழ் கோதையை வானவர் நாடியைச் செம்பவ ளத்திரு மேனிச் சிறுமியை நம்பிஎன் உள்ளே நயந்துவைத் தேனே. (ப. இ.) கொம்புபோன்று துவளும் இடையினை உடையாளை, குவிந்த அழகிய மார்பினையுடைய மங்கையை, மணங்கமழ்கின்ற மலர்சூடிய கூந்தலையுடையாளை, சிவவுலகத்துள்ளார் இடையறாது சிந்தித்துத் தொழும் செல்வியை, செம்மையான பவழம்போலும் திருமேனியை உடைய இளநங்கையை மும்மைக்கும் பெருந்துணையென்று உறுதியாக நம்பி மிக விரும்பி என் உள்ளத்துள்வைத்தேன். சிறுமி - கௌரி: எட்டு அல்லது பத்து ஆண்டுப் பருவப்பெண். வானவர் நாடியை என்பதற்குத் தேவ வாழ்வினையுடையாளை என்றும் கூறுவர். (அ. சி.) வானவர்நாடி - தேவர்களால் விரும்பிப் பூசிக்கப்படுபவள். (14) 1035 .வைத்த பொருளும் மருவுயிர்ப் பன்மையும் பத்து முகமும் பரையும் பராபரைச் சித்தக் கரணச் செயல்களுஞ் செய்திடுஞ் சத்தியும் வித்தைத் தலையவ ளாமே. (ப. இ.) அருளால் தோற்றுவித்துள்ள உலகுடல் உண்பொருள்களும் அப் பொருள்களுடன் இணைத்துவைக்கப்பெற்ற அழிவில்லாத பலவுயிர்களும், பத்துத்திசையிலும், நிறைந்து நின்றியக்கும் பான்மையால் பத்து முகமுடையவளும், நடப்பாற்றலாகிய பரையும், வனப்பாற்றலாகிய பராபரையும், அகக்கரணமாகிய எண்ணம், மனம், எழுச்சி, இறுப்பு என்னும் நான்கினையும் செயல்படுத்துபவளும், எல்லாவற்றையும் இயக்கும் முதல்வியும் ஆகிய உலகீன்ற அம்மை திருவடியுணர்வின் தலைவியாவாள். வித்தை - திருவடியுணர்வு; மெய்யுணர்வு; பதிஞானம்; பிரம வித்தை. (15) 1036 .தலைவி தடமுலை மேல்நின்ற தையல் தொலைவில் தவஞ்செயுந் தூய்நெறித் தோகை கலைபல வென்றிடுங் கன்னியென் உள்ளம் நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே.1 (ப. இ.) திருவருளம்மை அண்ணாந்து ஏந்திய வனமுலையினையுடைய தையலாகிய தலைவி. அவளே கெடாத நற்றவஞ்செய்யும் செந்நெறித்தோகை. மறைமுறை முதலாகிய உறுதி நூல்களும், இலக்கண இலக்கிய முதலிய எழில் நூல்களும் உலகுய்ய உள்நின்று உணர்த்தியருளிய என்றும் ஒருபடித்தாம் கன்னியாவளும் அவளே. அவ் அம்மை
1. உண்ணாமுலை. சம்பந்தர், 1. 10 - 1. " சிவஞ்சத்தி. சிவஞானசித்தியார், 2. 4-5. " தெய்வச். அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், வாரானை - 6.
|