619
 

1582. வைச்சன வாறாறு மாற்றி யெனைவைத்து
மெச்சப் பரன்றன் வியாத்துவ மேலிட்டு
நிச்சய மாக்கிச் சிவமாக்கி ஞேயத்தால்
அச்சங் கெடுத்1தென்னை யாண்டனன் நந்தியே.

(ப. இ.) ஆவிகள் சிவபெருமானைக் கூடுதற்பொருட்த் துணைக் கருவிகளாக அமைத்துக் கொடுத்த முப்பத்தாறு மெய்களும் ஆவியின் வழிச் செல்லாது ஆவிகளைத் தன்வழி இழுத்துத் தடுமாற்றத்துக்கு உட்படுத்தித் தாம் தலைமையாக நிற்கின்றன. ஆவிக்கு இவைகள்களையாகும். இக் களைகளைக் களைந்து ஆவியை வளர்த்தெடுப்பது திருவருளின் சீர் ஆகும். அம் முறையே ஆண்டவன் திருவடிக் கண்ணும் ஆவியை அத் திருவருள் நிலைப்பிக்கும். அப்பொழுது அடக்கமாகிய செறிவினை ஆவியடையும். செறிவு வியாபகம்; வியாத்துவம். சிவம், நிறைவாகிய வியாபகமாக இருக்கும். ஆவி அச் சிவமாம் பெருவாழ் வெய்தும். திருவடியுணர்வாகிய ஞேயத்தால் எனக்குள்ள பிறப்பு இறப்பாகிய அச்சத்தைக் கெடுத்தனன். கெடுத்து என்னையும் ஆண்டு கொண்டனன். அவனே நந்தியாகிய சிவபெருமான்.

(அ. சி.) ஆறாறு - 36 தத்துவங்கள். மாற்றி - களைந்து. எனை வைத்து - என்னை நிலைக்கச் செய்து. பரன்றன் வியாத்துவம் மேலிட்டு சிவத்தின் வியாபகம் மேலிடும்படி செய்து. நிச்சயமாக்கி சிவமாம் தன்மை எய்த வைத்து. ஞேயத்தால்-அச் சிவத்தினால்.

(4)

1583. முன்னை யறிவறி யாதஅம் மூடர்போற்
பின்னை யறிவறி யாமையைப் பேதித்தான்
தன்னை யறியப் பரனாக்கித் தற்சிவத்து
என்னை யறிவித் திருந்தனன் நந்தியே.

(ப. இ.) சிவதீக்கை பெறுமுன், அறிய வேண்டிய உண்மைகளை அறியாதிருந்த அறிவிலார்க்குச் சிவதீக்கைக்குப் பின் அறிவறியாமை என்னும் இரண்டினையும் சிவன் அழித்தனன். தன்னையாகிய ஆவியை அறிய அவ் வாவியைச் சிவமாக்கினன். ஆக்குதலும் சிவத்துடன் கூடி ஆவி தன்னையும் சிவத்தையும் காணும். அவ்வாறு காணும்படி அருளினன் சிவபெருமான்.

(அ. சி.) முன்னை - தீக்கை பெறாமுன்னர். பின்னை - தீக்கை பெற்றுப் பாசம் ஒழிந்தபின். அறிவறியாமையைப் பேதித்தான் - அறிதலும் அறியாமலிருத்தலும் என்னும் தன்மையை ஒழித்தான். தன்னை அறியப் பரனாக்கி - ஆன்மாவாகிய தன்னை உணரச் சிவமாக்கி. தற்சிவத்து - அந்தச் சிவனிடத்திலே. என்னை - ஆன்மாவை.

(5)

1584. காணாத கண்ணுடன் கேளாத கேள்வியுங்
கோணாத போகமுங் கூடாத கூட்டமும்
நாணாத நாணமும் நாதாந்த போதமுங்
காணா யெனவந்து காட்டினன் நந்தியே.2


1. விச்சைதான். 8. சுட்டறுத்தல். 29.

2. இந்துவில், சிவஞானபோதம், 9. 3 - 1.