857
 

சிவபெருமான் குருடர்க்கு வேண்டியது கோலே எனத் திருவெண்பாக்கத்து ஊன்றுகோலருளிய உண்மையான் ஈதுணரலாகும்.

(அ. சி.) விழிகண் - பார்க்கும் கண். மூவயின் - மூவகைப்பட்ட (சகலர், பிரளயாகலர், விஞ்ஞகர்).

(3)

2131. மத்திம மொத்த சிலந்தி வலயத்துள்
ஒத்தங் கிருந்து உயிருண்ணு மாறுபோல்
அத்தனும் ஐம்பொறி யாடகத் துள்நின்று
சத்த முதல்ஐந்துந் தானுண்ணு 1மாறே.

(ப. இ.) சிலந்தியானது தன் வாயினால் தன்னுடம்பினின்றும் நூல் இழைக்கின்றது. அந் நூலால் தனக்குவேண்டிய உணவுகளை அகப்படுத்தும் வலைகளை அமைத்துக்கொள்ளும். மேலும் தான் தங்குவதற்குரிய கூடும் அமைத்துக்கொள்ளும். அக் கூட்டின் மத்தியில் தான் தங்குவதற்குரிய வாய்ப்பான இடமும் அமைத்துக்கொள்ளும். அவ் விடத்தையே மத்திமம் என்றருளினர். அதுபோல் சிவபெருமானும் ஆருயிர்கள் இருவினைக்கு ஈடாக ஆடுதல்புரியும் இடமாம் உடம்பினை அமைத்தருளினன். அவ் வுடலினின்று உயிர் ஆட்டம்புரியும். அத்தனாகிய சிவபெருமானும் ஐம்பொறிசேர் உடம்பகத்து அவ் வுயிர் ஐம்புலன்களையும் நுகர்தற்பொருட்டுத் தானும் உடங்கியைந்து காட்டிக் காண்பன். காட்டுதல் - உண்பித்தல். காணுதல் - உண்பிக்கத் துணை செய்தல். ஆகவே சிவபெருமான் அவ் வுடம்பகத்து உயிர்க்குயிராகத் தங்கி அருளுகின்றனன். தன்னைத் தாங்கும் தகுதியும் அதற்கு அவனே அளித்தருளினன். அவன் 'எம்மான் இருப்பும் இருப்பதுவுமாயிருப்பன், செம்மான் பிறை ஏறு சேர்ந்து' என்பதனால் இவ் வுண்மை புலனாகும்.

(அ. சி.) மத்திமம் ஒத்த சிலந்தி வலயத்துள் - சிலந்திக்கூட்டில் சிலந்தி தான் தாங்கக் கட்டும் மத்தியிலுள்ள வலுத்த இடத்தில் இருப்பதை அத்தன் - ஆன்மா. ஆடகம் - சரீரம்.

(4)

2132. வைச்சன வச்சு வகையிரு பத்தஞ்சு
முச்சு முடனணை வானொரு வன்னுளன்
பிச்சன் பெரியன் பிறப்பிலி என்றென்று
நச்சி யவனருள் நானுய்ந்த 2வாறன்றே.

(ப. இ.) சிவபெருமான் ஆருயிர்கள் உய்தற்பொருட்டு வேண்டுவார்க்கு வேண்டும் திருக்கோலம்கொண்ட திருவுருவங்கள் இருபத்தைந்தாகும். அவற்றையே 'வைச்சனவாகிய அச்சுவகை இருபத்தஞ்சு' என்று ஓதினர். அவற்றின்கண் சிறப்பாக அணைந்து அருளிச்செய்யும் ஒப்பில் திருவுருவுடையவன் ஒருவனுளன். அவனே சிவபெருமான்.


1. காணுங். சிவஞானபோதம், 11.

" காணாதாற். திருக்குறள், 849.

2. கச்சைசே. அப்பர், 4. 66 - 1.

" பையஞ்சு. " 4. 4 - 10.

" சிரிப்பிப்பன். 8. நீத்தல் விண்ணப்பம், 49.

" வேதமடி. வில்லிபுத்தூரார் பாரதம், 8. த - 109.