தைகள் பத்தினையும் கருதுக. கருதி முடிவில்லாத அவத்தையை அவ் வாக்கியத்தால் செலுத்து முறையில் வைத்து ஓதுதல் வேண்டும். அங்ஙனம் ஓதுங்கால் சிவத்தை முன்வைத்து ஓதுக. சிவத்தை முன் வைத்து ஓதுவது 'சிவயநம'. (அ. சி.) வாசி - பிராணவாயு. ஈரைந்து - பத்து அவத்தைகளாக. சிவமுன்வைத்து - சிவ, பர, சீவ, என வைத்து. (3) 2452. வைத்துச் சிவத்தை மதிசொரு பானந்தத்து உய்த்துப் பிரணவ மாம்உப தேசத்தை மெய்த்த இதயத்து விட்டிடு மெய்யுணர்ந்து அத்தற் கடிமை யடைந்துநின் 1றானன்றே. (ப. இ.) மேலோதியவாறு சிவத்தை முன்வைத்து ஓதுதலான் ஆருயிரின் அறிவு அச் சிவத்தின் இயற்கை உண்மை அறிவு இன்ப வடிவின்கண் செல்லும். அங்ஙனம் செல்லுமாறு செலுத்தி ஓமொழிச் செவியறிவுறூஉவாம் உபதேசத்தை மெய்யுணர்வால் களங்கமற்ற உள்ளத்தினிடத்துச் செலுத்திடும். அதன்பின் திருவருளால் சிவபெருமானின் திருவடியுணர்வினை உணர்ந்து அத் திருவடிக்கு என்றும் நீங்கா அடிமையாக அவ்வுயிர் நின்று இன்புறும். (அ. சி.) மதி - அறிவு. மெய்த்த - களங்கமற்ற. விட்டிடும் - சேர்ப்பன். (4) 2453. தொம்பத மாயையுள் தோன்றிடுந் தற்பதம் அம்பரை தன்னில் உதிக்கும் அசிபதம் நம்புறு சாந்தியில் நண்ணுமவ் வாக்கியம் உம்பர்உரை தொந்தத் தசிவாசி யாமே. (ப. இ.) துவம்பதப் பொருளாகிய நீ என்னும் உயிர்நிலை மாயையாகிய அறியாமைப் பிணிப்பில் கிடக்கும். அவ்வறியாமையை அகற்றுதற்குத் தற்பதப் பொருளாகிய சிவனும் கலப்பால் ஒன்றாய்த் திகழ்வன். அழகிய பரையாகிய திருவருளின்கண் அசிபதப் பொருள் தோன்றும். விருப்புறும் அமைதி யொடுக்கத்தின்கண் அச் சொற்பொருள் அமையும். மேலாம் பொருளுரை உயிர்ப்பின்கண் பயிலும் இரேசகமாகிய வெளிவிடுதற்குத் தொம்பதமும், பூரகமாகிய உள்ளிழுத்தற்குத் தத்பதமும், கும்பகமாகிய மூச்சை அசைவற நிறுத்தற்கு அசிபதமும் கொள்ளப்படும் என்க. நம்பு - நசை; விருப்பம். 'நம்பும் மேவும் நசையாகும்மே' என்னும் தொல்காப்பிய (33) உரியியலால் நம்பு நசையாகும் என்பது காண்க. (அ. சி.) மாயையுள் - அஞ்ஞானத்துள். (5) 2454. ஆகிய வச்சோயந் தேவதத் தன்னிடத்து ஆகிய வைவிட்டாற் காயம் உபாதானம் ஏகிய தொந்தத் தசியென்ப மெய்யறி வாகிய சீவன் 2பரசிவ னாமன்றே.
1. அத்தாவுன். அப்பர், 6. 95 - 8. (பாடம்) 2. பரன்சிவ.
|