1139
 

ஓதப்பட்டது. இவ்வுண்மை வரும் சித்தியார்த் திருப்பாட்டான் உணரலாம்:

"அவ்வுடன் உவ்வு மவ்வும் மனம்புத்தி யகங்கா ரங்கள்
செவ்விய விந்துநாதம் சித்தமோ டுள்ள மாகும்
ஒவ்வெனும் எழுத்தா மைந்தும் உணர்வுதித் தொடுங்கு மாறும்
பவ்வமுந் திரையும் போலும் பார்க்கிலிப் பண்புந் தோன்றும்."

(4. 1 - 3.)

'பிரணவமாகலின் உள்ளவாறே வெளிப்படக் கூறாது ஒவ்வெனக் கடைக் குறைத்துக் குறுக்கல்விகாரமாக்கிக் கூறினார்.' (சிவஞான முனிவர்.)

திருந்திய நல்ல 'சி' கரத்தின் நீட்டலாகிய சீ என்னும் எழுத்தினைக் குறிப்பது துடிசேர் வலது பொற்கையாகும். உதறிய திருக்கை இடது கையாகும். இதனை வீசுகரம் எனவும் கூறுப. இது 'வ' கரமாகும். நன்னெறிநான்மையின் நற்றவம்புரிந்த அருந்தவத்தோரை வாவென்று அழைத்து அணைத்துக்கொண்ட பொருந்துமுறையில் இமையாநாட்டம் சேர்முக்கண்ணினானது வலது அஞ்சலிக்கை 'ய' கரமாகும். மழுவேந்திய இடது திருக்கை 'ந' கரமாகும். திரு என்பது ஈண்டு நகரத்தின் மேற்று. நிலையாகிய ஊன்றிய வலது திருவடி 'ம' கரமாகும்.

இவ்வுண்மை வரும் உண்மைவிளக்கத் திருவெண்பாவால் உணரலாம்.

"சேர்க்குந் துடிசிகரம் சிக்கனவா வீசுகரம்
ஆர்க்கும் யகரம் அபயகரம் - பார்க்கிலிறைக்கு
அங்கி நகரம் அடிக்கீழ் முயலகனார்
தங்கும் மகரமது தான்."

(33)

(அ. சி.)திருந்தத் தீயாகுந் திருநிலை - குற்றம் நீங்கத் தீவடிவான தன்மை.

(36)

2752. மருவுந் துடியுடன் மன்னிய வீச்சு
மருவிய அப்பும் அனலுடன் கையுங்
கருவின் மிதித்த கமலப் பதமும்
உருவில் சிவாய நமவென வோதே.

(ப. இ.) பொருந்திய துடிசேர் வலது திருக்கையால் சிகரமும், நிலைபெற்ற வீசும் இடது திருக்கையால் வகரமும், அப்பு என்னும் திருவருள் நிலைசேர் வல அஞ்சலிக்கையால் யகரமும், அங்கியாகிய மழுவேந்திய இடது திருக்கையால் நகரமும், (கருவினுக்குக் காரண மாகிய ஆணவக் குறிப்பாம் முயலகனை ஆகுபெயரால் கருவென்றே ஓதினர். அம் முயலகன்மேன்மிதித்த) வலது திருவடியால் மகரமும் பெறப்படுதல் காண்க. உருவில் என்பது உருவில்லாத அருவாகிய நுண்மை என்பதாகும். எனவே நுண்மைச் 'சிவயநம' என்னும் செந்தமிழ்த் திருவைந்தெழுத்தின் சிறப்பு மறையினைக் குறிக்கும் குறிப்பாவது காண்க.