போற்றுமின்; புகழ்மின். அங்ஙனம் புகழ்ந்தால், மேற்றிசை கீழ்த்திசை ஏனை எட்டுத்திசை ஆகப் பத்துத் திசைக்கும் அவனே முழுமுதல்வன். அவனே எங்கணும் மெய்ந்நெறியைப் பரப்புகின்றவன் ஆவன். அவன் ஆட்டும் அருள் வழியின்கண் நாம் ஆடின் திருவடிப் பேறு எய்துதல் உண்டு. (அ. சி.) ஆற்றுவன் - சன்மார்க்க நெறியினுள் படச் செய்வன். ஆற்றுகிலா வழியாகும் - முன் மந்திரத்தில் கூறிய வண்ணம் போற்றாவிட்டால் வழிபாடு செய்யாததற்கு ஒப்பாகும். அப்படி ஆட்டவும் (ஆற்றவும்) ஆமே - அப்படிச் சன்மார்க்க நெறியில் சேரும்படி செய்தால் வீடுபேறு கைகூடும். (35) 36. அப்பனை நந்தியை ஆரா அமுதினை ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால் அப்பரி சீசன் அருள்பெற லாமே. (ப. இ.) அனைத்துயிர்க்கும் தந்தையொப்பானை, அழியாச் செல்வ நந்தியை, உண்ணத் தெவிட்டாப் பண்ணப்படாத இயற்கை அமுதனை, ஒப்பில்லாத பிழைபொறுத்தாளும் விழைதகு வள்ளலை, பேரூழிக் காலத்தும் ஒடுக்கமின்றி நின்று மீண்டும் உலகினைப் படைப்பிக்கும் முழுமுதல்வனை, எந்த வகையானும் - அருள் உந்தும் வழியில் தொழுங்கள். தொழுதால் அந்த வகையால் அச் சிவனும் வந்து அருள்புரிவன். வள்ளலென்றார், நஞ்சுண்டு காத்த நாயனார் என்பது பற்றி. (36) 37. நானும்நின் றேத்துவன் நாள்தொறும் நந்தியைத் தானும்நின் றான்தழல் தானொக்கு மேனியன் வானில்நின் றார்மதி1 போல்உடல் உள்ளுவந் தூனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே. (ப. இ.) அவன் திருவருளால் அடியேனும் நாடொறும் நந்தியங் கடவுளைத் தொழுவேன். அவனும் விட்டுப் பிரிவின்றி உடன் நின்றனன். அவன் செந்தழலொக்கும் செம்மேனியன்; விண்ணிடை நிறைமதி போலும் தண்ணளி செய்து உடலுள் வந்து உவந்து நின்றனன். ஊனுள் நின்று உயிர்க்குமாறு செய்து செலுத்துகின்றனன். ஆர்மதி: கலைநிரம்பு திங்கள். இஃது ஆவிக்குத் திருவடி யுணர்வு படி முறையான் நிரம்புவதற்கு ஒப்பு. ஊன்: ஆணவவல்லிருள். உயிர்க்கின்றவாறு: அவ்விருளைத் துரத்தும் மெய்யுணர்வு தோன்றும் வழி. (37) 38. பிதற்றொழி யேன்பெரி யான்அரி யானைப் பிதற்றொழி யேன்பிற வாஉரு வானைப் பிதற்றொழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னைப் பிதற்றொழி யேன்பெரு மைத்தவன்2 நானே.
1. மன்னும். சிவஞானபோதம், 11. 2-2. 2. பசித்துண்டு."... ... ... 8. 1-2. " சன்மார்க்கம். சிவஞானசித்தியார், 8-2-8.
|