17
 

(ப. இ.) அம்பலத்தாடும் ஐந்தொழிலருட் கூத்தனாம் பெரியானை மறவா நினைவுடன் அடிமைத் தொண்டு செய்து வழிபடலொழியேன். அலகில் ஒளிப்பிழம்பாய் அருவுருவக் காரணத் திருமேனியாய் எழுந்தருளும் சிவக்கொழுந்தாம் அரியானை மறவா நினைவுடன் மகன்மைத் தொண்டு செய்து வழிபடலொழியேன். நிலவாகிய திருவடியுணர்வு முற்றுப்பெற்ற ஆவியும், அவ் ஆவிக்கு உறுதுணையாக நிற்கும் வனப்பாற்றலாகிய மலிநீராம் திருவருளும் தலையன்பால் தங்க இடமருளி, ஆருயிர் உணர்வின்கண் தோன்றும் புறத்துப் பிறவா ஆற்றல் நிலைக்கள வேணியனாம் உணர்வுருவானை மறவா நினைவுடன் தோழன்மைத் தொண்டு செய்து வழிபடல் ஒழியேன். உலகெலாம் உணர்ந்து ஓதற்கரிய மெய்யுணர்வுசேர் வாலறிவனை, அவனருளால் புணர்ந்து நந்துதற்கு இடனளிக்கும் அச்சிவனை எஞ்ஞான்றும் வேறன்மையனாய் நின்று மறவா நினைவுடன் காதன்மைத் தொண்டு பூண்டு வழிபடலொழியேன். இவையே யான் பெற்ற இறப்பில் தவம். அதனால் யான் பெருமைத் தவமுடையேனாயினேன். இந் நான்கு நெறியினையும் முறையே சீலம், நோன்பு, செறிவு, அறிவெனக் கூறுவர்.

(38)

39. வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம்பெரு மான்என் றிறைஞ்சியும்
ஆத்தஞ்செய் தீசன் அருள்பெற லாமே
.

(ப. இ.) சிவபெருமான் தன்னைத் திருவைந்தெழுத்தால் வாழ்த்தவல்ல நற்றவத்தாரின் தூய திருவுள்ளத்து மிக்க அறிவுப் பேரொளியாய்த் தோன்றுவன். அத்தகைய இயல்பாகவே பாசங்களினின்று நீங்கிய தீர்த்தனை, மேலும் செவ்வி வாய்ந்த உயிர்கள்மாட்டு மகிழ்ந்து திளைக்கும் முழுமுதல் தெய்வத்தினைப் பலவாறாகப் பரவியும், எம் தலைவனே என்று வணங்கியும், அவனுக்கு முற்றும் உரிமையாய்த் தன்னை அறக்கொடுத்தவன் ஆப்தன் - நண்பன் எனப்படுவன். அந்நிலை எய்தியவர் அவன் திருவருள் பெறுவது எளிதாம். ஈசன் - ஆண்டவன்.

(39)

40. குறைந்தடைந் தீசன் குரைகழல் நாடும்
நிறைந்தடை செம்பொனின் நேரொளி ஒக்கும்
மறைந்தடஞ் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப்
புறஞ்சடஞ் செய்யான் புகுந்துநின் றானே.

(ப. இ.) சிவபெருமான் திருவடிக்கண் ஏக்கற்றவராய், அவன் திருவடியுணர்வால் தாழ்ந்தடைந்து அத் திருவடியை நாடுவாராக. அவன் நிறைந்த செம்பொனின் சிறந்த ஒளியை ஒப்பன். வஞ்சனையால் மறைந்து குறும்பு செய்யாது வாழ்த்தவல்ல மெய்யன்பர்களுடைய உடம்பினைப் புறக்கணியாது அதன்கண் புகுந்து நின்றனன். செய்யான்: முற்றெச்சம்.

(அ. சி.) குறைந்தடைந்து - மிகத் தாழ்ந்து வணங்கி. மறைஞ்சு அடம் செய்யாது - வஞ்சித்து மாறுசெயாது. புறம் சடம் செய்யான் - சடம் புறம் செய்யான் - சரீரத்தைப் புறக்கணிக்காது.

(40)