(ப. இ.) அரன் திருவடிப் பெயராம் திருவைந்தெழுத்தைத் தூய மனத்துடன் இடையறாது வழுத்தி, ஆற்றாமை மீதூரப்பட்டுப் பெரு முழக்கிட்டு அழுது, அச் சிவபெருமான் திருவடியே நினைவாகக் கொண்டு நின்று, எந்நாளும் உறுதியான வீடுபேற்றைத் தரும் அத் திருவடிக்கண் அடங்கி நிற்க வல்லார்க்கு அவன் எங்குஞ் செறிந்த எல்லாம் நிரம்பிய திருவடியை அருளி, அந் நல்லாருடன் புணர்ப்பாய் வேறறநின்று நிறைந்தனன் என்க. (அ. சி.) உரன் அடி செய்து - உறுதியான எண்ணத்துடன். ஒதுங்க வல்லார் - துதித்து அரற்றி, அழுது பரவ வல்லார். (43) 44. போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே. (ப. இ.) இன்ப வேட்கையராய அமரர்கள் அதன் பொருட்டுத் தூயோனாகிய சிவபெருமான் திருவடியைப் போற்றி செய்வர். பொருள் வேட்கையராகிய அசுரர்கள் அதன் பொருட்டு அவன் திருவடியைப் போற்றி செய்வர். அறத்தின் வேட்கையராகிய நன்மக்கள் அதன் பொருட்டுச் சிவனைப் போற்றியுரைத்துத் தங் கைகளால் மலர் தூவி வழிபடுவர். வீடுபேற்று வேட்கையனாகிய அடியேனும் திருமுறைப் போற்றித் தொடர் புகன்று வழிபட்டு என் அன்பினுள் திகழும்படி விளங்க வைத்துத் துளக்கின்றி நிற்கின்றேன். (44) 45. விதிவழி அல்லதிவ் வேலை உலகம் விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை துதிவழி நித்தலுஞ் சோதிப் பிரானும் பதிவழி காட்டும் பகலவ னாமே. (ப. இ.) வகுத்தான் வகுத்த வகையாகிய விதிவழியல்லாமல் கடலாற் சூழப்பட்ட உலகம் நடைபெற மாட்டாது. வகுத்தான் - சிவபெருமான் அச் சிவன் விதித்தவாறே என்றும் இன்பம் பெருகும். அத் திருவாணைக்கு மாறுதலாகிய விருத்தமுமில்லை. நாடொறும் திருவைந்தெழுத்தெண்ணித் தொழுது நிற்பார்க்குப் பதிவழியாகிய திருவடிப் பேற்றினை உலகம்மைக்குத் தன் உடம்பில் ஒருபாகம் பகுந்து கொடுத்துப் பகலவன் என்னும் திருப்பெயர் பூண்டு நிற்கும் சிவன் அளித்தருள்வன். (அ. சி.) வேலை - கடல் சூழ்ந்த உலகம். பதிவழி - முத்திமார்க்கம.் (45) 46. அந்திவண் ணாஅர னேசிவ னேஎன்று சிந்தைசெய் வண்ணந் திருந்தடி யார்தொழ முந்திவண் ணாமுதல் வாபர னேஎன்று வந்திவ்1 வண்ணன்எம் மனம்புகுந் தானே.
1. (பாடம்) புந்தி.
|