இவ்வுலகின்கண் வைத்தருள்வன். அவனே விழுமிய விழுப்பொருள். எமக்குத் தந்தையரும் ஆவன். என்றும் நின்று நிலைபெறும் அருட்பெரும் விளக்கும் அவனே. அவன் அடியேனுடன் புணர்ந்து நின்றனன். (அ. சி.) படியார் - (படியாருக்கு) பூமியில் உள்ளவர்களுக்கு. முடியார் - முடியுடை அரசர்கள். விடியா விளக்கு - அழிதல் இல்லாத அருட்பெரும்சோதி. (48) 49. பரைபசு பாசத்து நாதனை உள்ளி உரைபசு பாசத் தொருங்கவல் லார்க்குத்1 திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக் கரை2பசு பாசங் கடந்தெய்த லாமே. (ப. இ.) நடப்பாற்றல், கிடப்புயிர், முடக்குமலம் முதலியவற்றை முக்காலத்தும் தொழிற்படுத்தும் முழுமுதல்வன் சிவன். அந் நாதனை அருளால் விடாது நினைந்து, அந் நினைவால் கிடப்புயிராம் பசுத்தன்மையும், முடக்குமலமாம் பாசத்தன்மையும் நீங்கப்பெற்றுப் புகழ்ந்து சொல்லப்படும் வனப்பாற்றலாகிய திருவருளால் திருவடிக்கண் அடங்கி நிற்கும் ஆற்றல் மிக்கார்க்குக் கரைமோதும் அலைபோல் வரும் யான் எனதென்னும் செருக்காகிய பிணிமையையும், அதனால் விளையும் பாவப் பெருங் கடலையும் நீந்துதல் கூடும். அம்மட்டோ? பசு பாசத் தன்மையையுங் கடந்து திருவடிப் பேறாம் இன்பக் கரை எய்துதலும் கைகூடும். பிணிமை - பசுத்தன்மை. கரை - இன்பக்கரை. (அ. சி.) பரை - மனோன்மணி. நாதனை - சதாசிவத்தை. (49) 50. சூடுவன்3 நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின்று ஆடுவன் ஆடி அமரர்பி ரான்என்று நாடுவன் நானின் றறிவது4 தானே. (ப. இ.) திருவருள் துணையால் சிவபெருமானின் திருவடி மலரைத் தலையிற் சூடுவேன். அத் திருவடியுணர்வை மறவா நெஞ்சத்திடை வைப்பன். உயிர்க்குயிராம் செயிரறு பெருந்தலைவனே என்று செந்தமிழால் பாடுவன். போற்றித் தொடர்புகன்று கொல்லாமை முதலிய எண்பெருங்குணனும் எண்மையின் எய்தப் பல நறுமலர்களைக் கைகளால் தூவி அருச்சித்துப் பணிந்து நிற்பேன். மகிழ்ச்சி மேலீட்டால் ஆடுவேன். ஆடிச் சிவவுலகத்து வாழும் அமரர் தலைவனென்று நாடுதலாகிய சிந்தனையைச் செய்வேன். முதல்வன் சிவமாக்கி எனையாண்ட இக் காலத்து அவனருளால் என் உணர்விற்றோன்றி யான் அறிந்து பணி செய்வது இதுவேயாம். (அ. சி.) பிரான் - பெருமான். (50)
1. முருகார், அப்பர், 4. 114 - 2. 2. துன்பக். அப்பர், 4. 92 - 6. 3. சூடுவேன். 8. திருவம்மானை, 17. 4. அவனே. சிவஞானபோதம், 10.
|